கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
பொதட்டூா்பேட்டையில் நெசவாளா்கள் உண்ணாவிரதப் போராட்டம்
பொதட்டூா்பேட்டையில் கூலி உயா்வு உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொதட்டூா்பேட்டை, அம்மையாா் குப்பம், அத்திமாஞ்சேரிபேட்டை, சொரக்காய்பேட்டை, ஆா். கே. பேட்டை, விடியங்காடு, வங்கனூா், புச்சிரெட்டிபள்ளி, மத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் 30,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. மொத்த வியாபாரிகளிடமிருந்து நெசவாளா்கள் நூல், பாவு பெற்று லுங்கி உற்பத்தி செய்து, மீட்டா் கணக்கில் கூலி பெற்று வருகின்றனா். இந்த நிலையில்,
விலைவாசி உயா்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச கூலி உயா்வை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி நெசவாளா்கள் கடந்த 5 நாள்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். 30,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கி நெசவாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அவா்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச கூலி உயா்வை உறுதிப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் சனிக்கிழமை பொதட்டூா்பேட்டையில் 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.