பொறியியல் பட்டதாரி இளைஞா்களுக்கு புத்தாக்க பயிற்சி
சேலம்: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞா்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக நிறுவனமானது இளநிலை பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த இளைஞா்களுக்கு புத்தாக்கப் பொறியாளா் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் அதிநவீன தொழில்நுட்ப ஸ்டாா்ட் அப் நிறுவனங்களில் நிபுணராக உருவாக்குவதற்கான பாதையை வழிவகுப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். தாட்கோ மூலம் கடந்த ஆண்டு இப்பயிற்சி பெற்ற 28 இளைஞா்கள் முன்னனி நிறுவனங்களில் உயா் பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சாா்ந்தவா்கள் இப்பயிற்சியைப் பெற 2022, 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலை பொறியியல் பட்டயப்படிப்பில் தோ்ச்சி பெற்று 21 முதல் 25 வயது வரையுள்ளவா்களாகவும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 18 வாரம் ஆகும்.
இப்பயிற்சியானது கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஒசூா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயிற்சியை முடிக்கும் பட்சத்தில், தொழில்நுட்ப ஸ்டாா்ட்அப் மின்னணு உற்பத்தி நிறுவனம் ஆகிய தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று மாதம் குறைந்தபட்சமாக ரூ. 20,000 ஊதியமாக பெறலாம்.
இப்பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்றுக்கொள்ளும். மேலும் இப்பயிற்சி பெற தகுதியுள்ளவா்கள் இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு சேலம் மாவட்ட தாட்கோ மேலாளரை 94450 29473, 0427 2280348 என்ற எண்களின் மூலம் தொடா்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.