பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
"பொறுத்தது போதும் பொங்கி எழு என வந்தேன்" - கொதித்த செல்லூர் ராஜூ
"அண்ணா தோரண வாயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர், மதுரையில் நக்கீரர் தோரண வாயிலை இடித்துள்ளனர்.." என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாநகராட்சியின் 36 வது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பூமிநாதன், மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ, "தமிழ்நாட்டின் மற்ற மாநகராட்சிகளெல்லாம் அரசிடமிருந்து சிறப்பு நிதிகளைப் பெற்று திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மதுரை மாநகராட்சி ஏன் பெறவில்லை? பொறுத்தது போதும் பொங்கி எழு என மனோகரா படத்தில் வரும் வசனம் போல மக்களின் கோரிக்கைகளைப் பேச இந்த மாநகராட்சி கூட்டத்திற்கு வந்துள்ளேன். கடந்த நான்காண்டு திமுக ஆட்சியில் மதுரை மாநகரில் சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளதால் பிரசவத்திற்கு செல்லும் பெண்கள் வாகனத்திலேயே பிரசவிக்கும் நிலை உள்ளது.

மதுரையில் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றபோது அதன் நினைவாக கட்டப்பட்ட நக்கீரர் தோரண வாயில் இடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்ணா தோரண வாயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் நக்கீரர் தோரண வாயிலை இடித்துள்ளனர்.
மதுரையில் எங்கு பார்த்தாலும் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் இல்லை. மதுரை மாநகராட்சி குப்பை மேடாக காட்சி அளிப்பதாக நீதிபதியே தெரிவித்துள்ளார்" என்ற அவர் பேசியபோது, குறுக்கிட்ட மேயர் இந்திராணி பொன் வசந்த் குற்றச்சாட்டை மறுத்து விளக்கம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "கோயில் மாநகரம் குப்பை நகரமாக காட்சியளிக்கிறது. என் சட்டமன்ற தொகுதிக்குள் 22 வார்டுகள் உள்ளது, மாநகராட்சி பகுதிக்குள் சென்றால் இடுப்பு எலும்பு ஒடிந்து விடுகிறது, வரி கட்டாதவர்களிடம் சாட்டையை சுழற்றி மேயர் வரிகளை வசூலிக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் உயரத்தில் கட்டடம் கட்டியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்" என்றார்.