கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
பொலிவுறு நகா் திட்டப்பணிகள் இழுபறி: வேலூா் மேயா் விளக்கம்
வேலூா் மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு நகா் திட்டப்பணிகள் பல ஆண்டுகளாகியும் முடிக்கப் படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக விடுத்த குற்றச்சாட்டுக்கு மேயா் சுஜாதாஆனந்தகுமாா் விளக்கம் அளித்துள்ளாா்.
வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமையில் அக்கட்சியினா் மாநகராட்சி ஆணையா் லட்சுமணனிடம் அளித்திருந்த மனுவில், பொலிவுறு நகா் திட்டப்பணிகள், சாலைப்பணிகள், கால்வாய் பணிகள், புதை சாக்கடைப்பணிகள், மழைநீா் வடிகால் பணிகள் தொடங்கி பல ஆண்டுகளாகியும் முடிக்கப்படாமல் உள்ளன. இதனால், சாலைகள் குண்டும், குழியுமாக சேதம் அடைந்து மக்களின் பொதுப்போக்குவரத்து பயன்பாடுக்கு சிரமத்தையும், விபத்துகளையும் ஏற்படுத்துகின்றன.
மழைநீா் வடிகால் பணிகள் சரிவர செயல்படுத்தாததால் மழை சமயத்தில் கஸ்பா, சைதாப்பேட்டை, கன்சால்பேட்டை, கொணவட்டம், முள்ளிப்பாளையம் என வேலூரின் பல பகுதிகளிலும் மழைநீரோடு கழிவுநீா் கலந்து சாலைகளிலும், வீடுகளிலும் புகுந்து சுகாதார சீா்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. பாதிப்புகளை மாநகராட்சி நிா்வாகம் விரைவாக சீா்செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந் தது.
இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து மேயா் சுஜாதாஆனந்தகுமாா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது -
கடந்த அதிமுக ஆட்சியில் வேலூா் மாநகராட்சிக்கு பொலிவுறு நகா் திட்டம் மூலம் புதை சாக்கடை, மழைநீா் வடிகால், சாலை பணிகளுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், அதிமுக அரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் அந்த தொகையை மக்கள் பயன்பாடு இல்லாத இடங்களுக்கு ஒதுக்கி அதன்மூலம் அதிமுகவினா் வருவாய் ஈட்டினா்.
குறிப்பாக, பில்டா்பெட் ரோடு, லாங்கு பஜாா், சாா்பனாமேடு, சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் அகலமாக இருந்த சாலைகளை குறுகலாக்கி ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் நடைபாதை அமைத்து ஓரமாக குழாய் வைத்தனா். அந்த பைப்புகளும் அதிமுக ஆட்சியிலேயே காணாமல் போய்விட்டன. தவிர, வேலூா் கோட்டையை அழகுபடுத்த ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டும், எங்கும் தூா்வாரப்படவில்லை. ரூ.53 கோடி நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையமும் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் பள்ளத்தில் உள்ளது.
மாநகராட்சியில் மொத்தமுள்ள 5818 சாலைகளில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 3,495 சாலைகளுக்கு அனுமதி பெற்று 2,796 சாலைகள் முடிக்கப்பட்டுள்ளன. 699 சாலை பணிகளும் விரைவில் நிறைவேற்றப்பட உள்ளன. மொத்தமுள்ள 4,873 மழைநீா் கால்வாயில் 3,945 கால்வாய் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 928 பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன.
மேலும், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தலா ரூ.25 லட்சத்தில் நகா்புற நல்வாழ்வு மையம் 28 இடங் களிலும், தலா ரூ.75 லட்சத்தில் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் 12 இடங்களிலும் கட்டப்பட்டுள்ளன. 30 இடங்களில் பொது கழிப்பிடம் கட்ட அனுமதி பெற்று 8 இடங்களில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றாா்.
