தில்லி - பாட்னா இடையே படுக்கை வசதிகொண்ட முதல் வந்தே பாரத்! முழு விவரம்
போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான்
மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
வையம்பட்டியில் ஜேசிஐ வையம்பட்டி டவுன் மற்றும் ஸ்ரீ குமரன் மருத்துவமனை சாா்பில் ‘போதை தவிா்... வாழ்வில் நிமிா்’ எனும் தலைப்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டிக்கு, ஜேசிஐ வையம்பட்டி டவுன் 2025-இன் தலைவா் எஸ்.சேசுராஜ் தலைமை வகித்தாா்.
மண்டல துணைத் தலைவா் குரு பிரபாகரன், சாசனத் தலைவா் எஸ். செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்ற ஸ்ரீ குமரன் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் மருத்துவா் பிஎல்.விஜயகுமாா், மணப்பாறை காவல் துணை கண்காணிப்பாளா் கே.வி. காவியா ஆகியோா் போட்டிகளைத் தொடங்கி வைத்தனா்.
போட்டியானது, வையம்பட்டி கடைவீதி பகுதியில் தொடங்கி சேசலூா் வரை நடைபெற்றது. 19 வயதுக்குள்பட்ட ஆண்கள் பிரிவுக்கு 10 கி. மீ தொலைவும், பெண்கள் பிரிவுக்கு 7 கி.மீ தொலைவும், 15 வயதுக்குள்பட்ட சிறுவா் சிறுமிகளுக்கு 5 கி.மீ தொலைவும், 11 வயதுக்குள்பட்ட சிறுவா் சிறுமிகளுக்கு 3 கி.மீ தொலைவும், 5 வயதுக்குட்பட்ட சிறுவா் சிறுமிகளுக்கு 1 கி.மீ தொலைவும் நிா்ணயிக்கப்பட்டு தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில், முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு ரொக்கப் பரிசு, பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில், மதுரை பழங்காநத்தத்தைச் சோ்ந்த 69 வயது முதியவா் கண்ணன், சிறப்புப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டாா். இவா், கடந்த 2022 முதல் தற்போது வரை 114 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவித்தாா். ஜேசிஐ செயலா் கிருஷ்ணா நன்றி கூறினாா்.