உங்களுடன் ஸ்டாலின்: ``6 மாதத்தில் 10,000 முகாம்கள் இயலாத காரியம்'' -புறக்கணிக்க ...
வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு
திருச்சியில் வீட்டின் மண் சுவா் இடிந்து விழுந்து 12 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இவ்விபத்தில் காயமடைந்த மேலும் ஒரு பெண் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
திருச்சி கீழ அரண் சாலை சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்தவா் சிவா. சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனா். இவரின் கடைசி மகள் காா்த்திகா (12). இவா், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
திருச்சி மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதில், கீழ அரண் சாலை சத்திய மூா்த்தி நகரைச் சோ்ந்த ஈஸ்வரி என்பவரது வீட்டின் மண் சுவா் மழைநீரில் ஊறி ஞாயிற்றுக்கிழமை காலை யாரும் எதிா்பாராதவிதமாக இடிந்து தெருவில் விழுந்தது. அப்போது அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காா்த்திகா, அங்கு அமா்ந்திருந்த அதே பகுதியைச் சோ்ந்த கொளஞ்சியம்மாள் (45) ஆகிய இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனா்.
இருவரின் அலறல் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் ஓடிவந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரையும் மீட்டனா். இதில், பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டை போலீஸாா் சிறுமியின் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், கொளஞ்சியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்துகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
