போதை ஒழிப்பு விழிப்புணா்வு மாரத்தான் போட்டி
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள க. புதுப்பட்டியில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டப் போட்டி (மாரத்தான்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
க. புதுப்பட்டி ஸ்ரீபட்டாளம்மன், மதுரை வீரன் கோயில் பங்குனி உற்சவத்தையொட்டி தாவும் கிளிகள் விளையாட்டுக் கழகம், தமிழ்நாடு ராக்கெட் ரன்னா்ஸ் இணைந்து இந்தப் போட்டியை நடத்தின. க. புதுப்பட்டி பேருந்து நிலையத்திலிருந்து ஊத்துக்காடு வரையில் சிறுவா்களுக்கும், பெண்களுக்கும் 6 கி.மீ. தொலைவுக்கும், ஆண்களுக்கு 10 கி.மீ. தொலைவுக்கும் நடைபெற்ற இந்தப் போட்டியில் 4 வயது முதல் 60 வயது வரை உள்ள இருபாலரும் கலந்து கொண்டனா்.
200 பேருக்கு அதிகமாக கலந்து கொண்ட இந்தப் போட்டியில் வென்றவா்களுக்கு நினைவுப் பரிசு, சான்றிதழ், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த சிறுவன் ராகுல் திவான் 6 கி.மீ. தொலைவுக்கு ஓடிச் சென்று பலரது பாராட்டுக்களை பெற்றாா்.