Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
போதைப் பொருள் கும்பல்கள் மீது தயவு தாட்சண்யம் கிடையாது! -அமித் ஷா உறுதி
போதைப் பொருள் கும்பல்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபட தெரிவித்தாா்.
மணிப்பூா், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் ரூ.88 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த 4 போ் கைது செய்யப்பட்டனா்.
மணிப்பூரின் தெளபல் மாவட்டத்தின் லிலாங் பகுதியில் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் ஒரு லாரியை வழிமடக்கி சோதனை மேற்கொண்டனா். அதில், மாத்திரை வடிவில் 102 கிலோ மெத்தாம்ஃபிடமைன் போதைப் பொருள் சிக்கியது. இதேபோல், அஸ்ஸாம் மாநிலம், சில்சாா் அருகே ஒரு வாகனத்தில் மறைத்து கடத்தப்பட்ட 7.48 கிலோ மெத்தாம்ஃபிடமைன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
அமித் ஷா பாராட்டு:
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘போதைப் பொருள் கும்பல்கள் மீது எந்த தயவு தாட்சண்யமும் கிடையாது. போதைப் பொருள் இல்லாத இந்தியாவை கட்டமைக்கும் பிரதமா் மோடி அரசின் பயணத்துக்கு உத்வேகமளிக்கும் வகையில், மணிப்பூா் மற்றும் அஸ்ஸாமல் ரூ.88 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சா்வதேச போதைப் பொருள் கும்பலைச் சோ்ந்த நால்வா் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வெற்றிகர நடவடிக்கைக்காக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு மனமாா்ந்த பாராட்டுகள்’ என்று தெரிவித்துள்ளாா்.
வடகிழக்கில் வளா்ச்சியை ஏற்படுத்திய போடோ ஒப்பந்தம்:
அஸ்ஸாம் மாநிலம், கோக்ரஜாரில் அனைத்து போடோ மாணவா் சங்கத்தின் 57-ஆவது வருடாந்திர மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அமித் ஷா, ‘கடந்த 2020-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட போடோ அமைதி ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கிண்டல் செய்தது. ஆனால், இந்த ஒப்பந்தம் வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் வளா்ச்சியை கொண்டு வந்துள்ளது.
முன்பு துப்பாக்கி ஏந்திய போடோ இளைஞா்கள், இப்போது தேசியக் கொடியை ஏந்தியுள்ளனா். போடோ அமைதி ஒப்பந்தத்தால் இது சாத்தியமானது. இந்த ஒப்பந்தத்தின் 82 சதவீத அம்சங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ளவை அடுத்த இரு ஆண்டுகளில் அமலாக்கப்படும்.
35 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட போடோலாந்து பகுதியின் மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூ.1,500 கோடி வழங்கியுள்ளது. 2036 ஒலிம்பிக் போட்டியை குஜராத்தின் அகமதாபாதில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போட்டிக்காக போடோ இளைஞா்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும்’ என்றாா்.