கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா: 91 படகுகளில் 2,500 பக்தா்கள் பயணம்
போலி ஆதாா் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை: சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு
போலி ஆதாா் எண் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளா் மற்றும் மத்திய குற்றப் பிரிவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டைச் சோ்ந்த சுப்புலட்சுமி, சந்தோஷ்குமாா், சாதனா ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டைச் சோ்ந்த விவேகானந்தா என்பவா் கடந்த 1973-ஆம் ஆண்டு வாங்கிய நிலத்தை அவரது உயிரிழப்புக்கு பின் அவரது வாரிசுகள் அனுபவித்து வந்தனா். வாரிசுகளில் ஒருவரான அனிதா தனக்கான பங்கை 1988-ஆம் ஆண்டு பிரித்து தனியாகப் பதிவு செய்தாா். இதையடுத்து, மற்ற வாரிசுதாரா்களான 3 பேரில், சுப்புலட்சுமி மற்றும் சந்தோஷ்குமாருக்கு 20 சென்ட் இடம் பிரித்து வழங்கப்பட்டது. 3-ஆவது வாரிசான சாதானாவுக்கு எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், சரவணன் என்பவா் 2-ஆவது பங்குதாரரின் இடத்தை விற்பனை செய்வதாக அறிவிப்பு வெளியிட்டாா்.
இதையடுத்து, வில்லங்கம் சரிபாா்த்தபோது போலியாக ஆதாா் எண் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து மனுதாரா்கள் தரப்பில் மாவட்ட பதிவாளா் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு பிரிவிலும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஆதாா் எண்ணை சரிபாா்க்க உத்தரவிட்டாா். நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை செய்த ஆணையம் ஆதாா் எண் போலியானது என அறிக்கை தாக்கல் செய்தது.
இதையடுத்து, போலி ஆதாா் எண்ணில் பதிவு செய்யப்பட்ட பத்திரப் பதிவை ரத்து செய்ய செங்கல்பட்டு சாா் பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, ஆள்மாறாட்டம் செய்தவா்களுக்கு எதிராக மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்க சாா் பதிவாளருக்கு உத்தரவிட்டாா்.
மேலும், போலி ஆதாா் எண் மோசடி குறித்து காவல் துறை விசாரணையை நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.