`கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற வேண்டும்' - உயர் நீதிமன்றம் அதிரடி ...
போலி உணவுப் பாதுகாப்பு அலுவலா் கைது
திண்டுக்கல்லில் பிரியாணி உணவகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட போலி உணவுப் பாதுகாப்பு அலுவலரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்தவா் எழில்முருகன். இவா், திண்டுக்கல் ஏஎம்சி சாலையில் பிரியாணி உணவகம் நடத்தி வருகிறாா். இந்த நிலையில், எழில் முருகனை கைப்பேசி மூலம் திங்கள்கிழமை தொடா்பு கொண்ட நபா், தன்னை உணவுப் பாதுகாப்பு அலுவலா் என அறிமுகப்படுத்திக் கொண்டு, ரூ.500-யை தன்னுடைய ஓட்டுநரிடம் வழங்குமாறும், பின்னா் பேசிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தாா்.
இதனால் சந்தேகமடைந்த எழில்முருகன், திண்டுக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு விவரத்தைத் தெரிவித்தாா். இதுபோன்று யாரையும் பணம் கேட்டு அனுப்பவில்லை எனத் தெரிவித்தனா். இதையடுத்து, கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபரை அழைத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு எழில்முருகன் தெரிவித்தாா். இதன்படி, பணம் பெற வந்த நபரை ஊழியா்கள் மூலம் பிடித்த எழில்முருகன், திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியைச் சோ்ந்த பா. சண்முகசுந்தரம் (49) என்பது தெரியவந்தது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்பு அலுவலா் எனக் கூறி பணம் வசூலித்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக எழில்முருகன் அளித்த புகாரின் பேரில், போலி உணவுப் பாதுகாப்பு அலுவலரான சண்முகசுந்தரத்தை போலீஸாா் கைது செய்தனா்.