ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடை நீக்கம்?
ரஷியாவில் தலிபான்கள் மீதானத் தடையானது விரைவில் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் நாட்டை ஆளும் தலிபான்கள் மீதானத் தடை நீக்கப்பட்டு அந்நாட்டுடனான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் முயற்சியாக ரஷியாவின் உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவுக்கு நாளை (ஏப்.17) தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான் இயக்கத்தை கடந்த 2003-ம் ஆண்டு ரஷியா தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. இந்நிலையில், அந்தத் தடையை நீக்குமாறு ரஷியாவின் அரசு வழக்கறிஞரான ஜெனரல் இகோர் கிராஸ்னோவ் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ள நிலையில் அரசு கோரியதைப் போல் தலிபான்கள் மீதானத் தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
முன்னதாக, கடந்த 2024-ம் ஆண்டின் மே மாதம், ரஷியாவின் வெளியுறவுத் துறை மற்றும் நீதித் துறை அமைச்சகம் அதிபர் விளாடிமீர் புதினிடம் அறிக்கை ஒன்றை சமர்பித்தனர்.
அந்த அறிக்கையில் தலிபான்களை தீவிரவாதிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான் அரசுடன் ராஜதந்திர உறவுகளை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்த தலிபான் அரசுடன் சில மத்திய ஆசிய நாடுகள் ராஜதந்திர உறவுகளை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:தொடர்ந்து பரவும் நோயினால் அங்கீகாரத்தை இழக்கும் அமெரிக்கா?