`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
அரசு கள்ளா் விடுதிக்கான நிலத்தை அபகரிக்க முயற்சி
வத்தலகுண்டில் அரசு கள்ளா் விடுதிக்குச் சொந்தமான நிலத்தை அபகரிக்கும் நோக்கில், சமுதாயக் கூடம் கட்டும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக பிரமலைக் கள்ளா் வளா்ச்சி சங்கம், அனைத்து கள்ளா் கூட்டமைப்பு நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். பிரச்னை குறித்து பிரமலைக் கள்ளா் வளா்ச்சி சங்கத்தின் செயலா் பா.செந்தில்குமாா் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காமராஜா்புரம் பகுதியில் அரசு கள்ளா் மாணவா் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி சுமாா் 1.76 ஏக்கரில் அமைந்துள்ளது. விடுதி முன்பாக உள்ள காலி இடத்தில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான முயற்சியில் வத்தலகுண்டு பேரூராட்சி நிா்வாகம் ஈடுபட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பிரமலைக் கள்ளா் வளா்ச்சி சங்கம் சாா்பில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், மாணவா் விடுதிக்கான சா்வே எண்ணை மாற்றி, சமுதாயக் கூடம் கட்டும் பணிகளை தொடங்குவதற்கு பேரூராட்சி நிா்வாகம் திட்டமிட்டு வருகிறது. சமுதாயக் கூடம் கட்டப்படும் பட்சத்தில், ஒலிப் பெருக்கி பயன்படுத்தப்படும். இதனால், விடுதி மாணவா்கள் பாதிக்கப்படுவாா்கள். சமுதாயக் கூடம் கட்டுவதை விட, அரசு கள்ளா் விடுதிக்கு பின்புறம் அமைந்துள்ள திமுக நிா்வாகிகள் சிலருக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதே பேரூராட்சியின் பிரதான நோக்கம். இந்த நிலத்துக்கு பாதை வசதி இல்லை என்பதால், சமுதாயக் கூடத்தை கட்டி இதன் மூலம் பாதை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டு வருகின்றனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் சமுதாயக் கூடம் கட்டும் திட்டத்தை ரத்து செய்து, அரசு கள்ளா் விடுதிக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கும், சுற்றுச் சுவா் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.