ரயில் தண்டவாளத்தில் தண்டால்; சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட வீடியோ- இளைஞரை எச்சரித்து அனுப்பிய போலீஸ்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே தாமரை குட்டி விளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 90 கிலோ உடல் எடை கொண்ட கண்ணன், தனது எடையை விட 4 மடங்கு எடை கொண்ட 370 கிலோ காரை, யோக் வாக் என்ற முறைப்படி 25 மீட்டர் தூக்கி நடந்து சென்று உலக சாதனை படைத்துள்ளார். தமிழக இரும்பு மனிதன் என்ற பட்டத்தைப் பெற்ற கண்ணன், பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் நடைபெற்ற உலக இரும்பு மனிதன் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட இவர், 85 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இதையடுத்து இந்தியா இரும்பு மனிதன் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு பல்வேறு பளு தூக்கும் நிகழ்சிக்களை நடத்தி வருகிறார். அதிக எடை கொண்ட பொருட்களை தூக்கிச் செல்வது, லாரியை கட்டி இழுப்பது என அசாதாரணமான செயல்களை செய்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார். இரண்டு இருசக்கர வாகனங்களை தூக்கிச் செல்வது, நான்கு நபர்களை ஒரே சமயத்தில் தூக்கிச் சுமந்து செல்வது என பல்வேறு செயல்களை செய்துள்ளார்.

உடற்பயிற்சி, பாடி பில்டிங் போன்றவற்றில் ஆர்வமுள்ள இளைஞர்கள் இவரது 'கண்ணன் ஸ்ட்ராங்மேன் இந்தியா' என்ற முகநூல் பக்கத்தை பின் தொடர்ந்து அவரது வீடியோக்களை பார்ப்பதுடன் பகிர்ந்தும் வருகின்றனர். சில தினங்களுக்கு முன் கண்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தார். அதில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தனது நண்பர் ஒருவருடன், தண்டவாளத்தில் தண்டால் பயிற்சி எடுத்துக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ரயில் தண்டவாளத்தில் தண்டால் எடுப்பது ஆபத்தான செயல் எனவும், ஆபத்தை உணராமல் அவரது செயல் உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.

ரயில் நிலையத்தில், எதிர்புறம் உள்ள நடைமேடைக்கு கடந்து செல்ல தண்டவாளத்தின் குறுக்கே நடந்து சென்றாலே ரயில்வே போலீஸார் அபராதம் விதிப்பார்கள். அதுமட்டும் அல்லாது ரயில் நிலையங்களிலும், ரயில் தண்டவாளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடியோ எடுத்து ரீல்ஸ் போடுவது சட்டப்படி தவறானது என ரயில்வே துறை எச்சரித்தும் வருகிறது. இந்த நிலையில் இரும்புமனிதன் கண்ணனின் வீடியோவின் அடிப்படையில் அவரை நாகர்கோவில் ரயில்வே போலீஸார் அழைத்து விசாரணை நடத்தினர். மேலும், அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து கண்ணன் கூறுகையில், "ரயில்வே போலீஸார் என்னை அழைத்து, தண்டவாளத்தில் தண்டால் எடுத்தது தவறான செயல் எனத் தெரிவித்து விட்டுவிட்டனர்" என்றார்.