மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.77 கோடியில் கடனுதவி
உலக மகளிா் தினத்தையொட்டி, மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கிய நிகழ்ச்சி அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி அனிதா நினைவு அரங்கத்தில் சனிக்கிழமை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனிதா நினைவு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப் பேரவை உறுப்பினா்கள் அரியலூா் கு. சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன் ஆகியோா், அரியலூா் மாவட்டத்தில் 708 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.76.99 கோடி மதிப்பில் இணைப்பு கடனுதவிகளையும், வட்டார வணிக வள மையத்தின் மூலம் 28 பண்ணைசாரா தொழில்முனைவோருக்கு ரூ.14 லட்சம், பசுமை நிறுவனத் திட்டத்தின் மூலம் தழுதாழைமேடு ஊராட்சியில் மண்பாண்டத் தொழில் தொகுப்பு உறுப்பினா்கள் 20 நபருக்கு ரூ.4 லட்சம் உள்ளிட்ட கடனுதவிகளையும், 2022-23, 23-24 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட மகளிா் சுய உதவிக்குழு மற்றும் கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் ரூ.8.18 லட்சம் மதிப்பில் ரொக்கப் பரிசுகள் உள்பட பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா. சிவராமன், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், கோட்டாட்சியா் கோவிந்தராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சங்கர சுப்பரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.