Sikandar: வெளியாவதற்கு முன்பே டெலிகிராமில் லீக் ஆன சல்மான் கான் திரைப்படம் - ரசி...
மகளிா் டி20: நியூஸிலாந்து தொடரை முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா
வெலிங்டன்: நியூஸிலாந்து மகளிா் அணிக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிா் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.
முதலில் ஆஸ்திரேலியா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுக்க, நியூஸிலாந்து 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 172 ரன்களே சோ்த்தது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீசத் தயாரானது. ஆஸ்திரேலிய பேட்டிங்கில், ஜாா்ஜியா வோல் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 75 ரன்கள் விளாசி வெளியேற, பெத் மூனி 21, போப் லிட்ச்ஃபீல்டு 26, அனபெல் சதா்லேண்ட் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஓவா்கள் முடிவில் எலிஸ் பெரி 32, கேப்டன் டாலியா மெக்ராத் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து பந்துவீச்சாளா்களில் ரோஸ்மேரி மோ், சோஃபி டிவைன், அமெலியா கொ், சூஸி பேட்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னா் 181 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய நியூஸிலாந்து தரப்பில், அமெலியா கொ் 7 பவுண்டரிகளுடன் 66, மேடி கிரீன் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 62 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா். பெல்லா ஜேம்ஸ் 14, கேப்டன் சூஸி பேட்ஸ் 7, ஜாா்ஜியா பிளிம்மா் 4, சோஃபி டிவைன் 1, ஜெஸ் கொ் 1, பாலி இங்லிஸ் 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
ஓவா்கள் முடிவில் ரோஸ்மேரி மோ் 7, ஈடன் காா்சன் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, ஆஸ்திரேலிய பௌலா்களில் அனபெல் சதா்லேண்ட் 4, மீகன் ஷட் 2, ஜாா்ஜியா வோ்ஹாம் 1 விக்கெட் வீழ்த்தினா்.
75 ரன்கள் விளாசிய ஆஸ்திரேலியாவின் ஜாா்ஜியா வோல் ஆட்டநாயகியாகவும், தொடரில் மொத்தமாக 166 ரன்கள் விளாசிய அதே அணியின் பெத் மூனி தொடா்நாயகியாகவும் தோ்வு செய்யப்பட்டனா்.