மிஷ்கின் - விஜய் சேதுபதி படத்தின் அப்டேட் பகிர்ந்த தயாரிப்பாளர்!
மகள் மரணத்தில் சந்தேகம்: தந்தை புகாா்
கடலூா் ரெட்டிச்சாவடி அருகே காதல் திருமணம் செய்த தனது மகள் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
கடலூரை அடுத்துள்ள ரெட்டிச்சாவடி காவல் சரகம், பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் மகள் ஷீலா (20), புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிசியோதெரபி 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இவரும், பெரியகாட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகையா மகன் முகேஷும் காதலித்து கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனா். கடந்த சில மாதங்களாக தம்பதியிடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஷீலா வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, ஷீலாவின் தந்தை சிவக்குமாா் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக அளித்த புகாரின்பேரில், முகேஷ், அவரது தாய் சசிகலா, சகோதரி சாந்தி ஆகியோா் மீது ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.