செய்திகள் :

பசியின் வலியைத் தெரிந்தவர் கேப்டன் விஜயகாந்த்! - தயாரிப்பாளர் டி. சிவா உருக்கம்

post image

- மோ. வினோத் ராஜா

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நினைவு நாள் இன்று.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி அவரைப் பற்றிய நினைவுகளை திரைப்படத் தயாரிப்பாளரும் விஜயகாந்துடன் நெருக்கமாகத் தொடர்ச்சியாகப் பயணித்தவருமான டி. சிவா, தினமணி இணையதளத்துடன் பகிர்ந்துகொண்டார்.

நேர்காணல்:

விஜயகாந்த்தை இழந்து இப்படியொரு தருணத்தில் அவரை நினைத்துப் பேசுவோம் என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மன வேதனை தருகிறது. எனினும், அடுத்த தலைமுறைக்கு அவருடைய வாழ்க்கை, ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என்பதால் அவற்றையெல்லாம் அவசியம் பேசத்தான் வேண்டும்.

சென்னையில் இயக்குநர் நேதாஜியுடனான சந்திப்பின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகும் கனவோடு 19 வயது இளைஞனாக கோபிச்செட்டிபாளையத்திலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்ததிலிருந்து ஆரம்பமாகிறது எனது திரைப் பயணம்... தெரிந்தவர், உறவினர் எனப் பலரிடமும் பணம் பெற்று ரூ. 3 லட்சம் வரை சேர்த்துக்கொண்டு சென்னை வந்த நான், இயக்குநர் நேதாஜி மூலமாக நடிகர் விஜயகாந்த்தைச் சந்திக்க வந்திருந்தேன். ஆனால், அதற்கு முதலில் ராவுத்தரை பார்க்க வேண்டியிருந்தது.

சினிமாவில் உதவி இயக்குநராக இருந்து, புகைப்படக் கலைஞனாக இருந்து, தொடர்ந்து, ஒரு தயாரிப்பாளராக முடிவெடுத்த நான், இயக்குநர் நேதாஜியுடனான நெருங்கிய பழக்கத்தால் அவர் மூலமாக நடிகர் விஜயகாந்த்தை நேரில் பார்த்துக் கதை சொல்லச் சென்றேன் (அப்போது வயது 19!).

அவரோ, சர்வ சாதாரணமாக என்னைக் கருதாமல், “அப்படியா ராவுத்தரிடம் எல்லாம் பேசிவிடுங்கள்“ என்று சொல்லி கைகாட்டிவிட்டார்.

விஜயகாந்த்தை சந்திக்கும்போது, அவரே நினைத்திருப்பார், “என்னடா, இது ஒல்லியா சின்னப் பையனா இருக்கிறான், இவன் தயாரிப்பாளரா? எப்படிப் பணத்தைச் செலவழித்து வாழ்க்கை நடத்தப் போகிறான்" என்றுகூட யோசித்திருப்பார்.

அப்போது, விஜயகாந்த்தின் சம்பளம் ரூ. 4 லட்சம் இருக்கும். அந்த சமயத்துல மூணு அல்லது மூன்றரை லட்சத்துல ஒரு திரைப்படத்தை முடிக்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால், விஜயகாந்த்தை நடிக்க வைத்து படம் எடுக்க வேண்டுமென்றால் கூடுதலாகப் பணம் செலவாகும் என்று நினைத்து, நான் ஊரில் நிறைய பேசி பணத்தை எப்படியோ ஏற்பாடு செய்துவிட்டேன்.

அப்போது, விஜயகாந்த் சொன்ன விஷயம், “படம் எடுக்க ரூ. 5 லட்சம் வரை செலவாகும்னு ராவுத்தர் சொல்லியிருக்கிறாரா? பரவாயில்லை, பாத்துக்கலாம். நீ படம் பண்ணு...” என்று சொல்லி ஊக்கமளித்தார்.

படப்பிடிப்பும் ஆரம்பமானது. படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் நேசத்துடன் எளிமையாகப் பழகுவார். கடைசியில் படம் எடுத்து முடித்துவிட்டோம். ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை, சுமாராகவே போனது.

அப்போது, அவர் சொன்ன விஷயம் இது, “நீ என்னுடனேயே இரு, நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்.” நிறைய நஷ்டம். அப்போது அவர் சொன்னார், “தம்பி இதுக்கெல்லாம் கலங்காதே. அடுத்த படமும் சேர்ந்து பண்றோம். படம் மூலம் வருகிற பங்கில் 25 சதவீதம் நம்ம தம்பிக்கு கொடுத்திடுவோம் ராவுத்தர்...” என்று ஆரம்பித்த படம் பெரிய ஹிட் ஆனது.

இப்படிச் சொன்னது மட்டுமல்லாமல், தயாரிப்பு நிறுவனம் ஒன்றை அவரே ஆரம்பித்து அதில் என் பெயரையும், ராவுத்தர் அவர்களின் சகோதரி மகளது பெயரையும் தயாரிப்பாளர்களாகப் போட்டுக் கொடுத்தார். என் பெயரில் 25 சதவீதம் பங்கு போட்டு தமிழ் அன்னை சினி கிரியேஷன்ஸ் பட நிறுவனத்தை ஆரம்பித்துக் கொடுத்தார். அதில் அவர் நடித்த ‘பூந்தோட்ட காவல்காரன்’ படம் வெளியானது.

படம் வெளியான நாள் அன்று என்னை அழைத்த அவர், “முதல் படத்தில் உனக்கு எவ்வளவு நஷ்டம்?” என்று கேட்டார். நான், மூன்றரை லட்சம் வரை நஷ்டமடைந்ததாகக் கூறினேன். உடனடியாக அவர் ரூ. 7 லட்சத்தை எடுத்துத் தந்து, “உன்னுடைய உழைப்பு போக மீதி இது” என்று என்னிடம் கொடுத்தார். அந்த பணத்தைப் பெறும்போதுதான் முதல் வெற்றியை உணர்ந்தேன். சுமார் 44 ஆண்டுகளுக்கு முன், ரூ. 7 லட்சம் என்பது பெரிய தொகை. அதைக் கொண்டு கடன்களை எல்லாம் அடைத்தேன்.

அந்தப் படத்தில் எனக்கு பங்கு மூலமாகக் கொடுக்கப்பட்டது ரூ. 7 லட்சம். ஏற்கெனவே ஏற்பட்ட நஷ்டத்தையெல்லாம் அடைத்துவிட்டு எல்லோர் முன்னிலையிலும் ‘கெத்து’-ஆக நின்றேன். அந்த சுகம் வேற மாதிரி... என்னைத் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் விஜயகாந்த்தான்.

இவையெல்லாம் அவரே தாமாக செய்தவை. “என்னால் நீ நஷ்டமடைந்தாய், உன்னை நான் நஷ்டமடைய விடமாட்டேன்” என்று எண்ணுபவர் அவர்.

ஒரேயொரு சிவாவுக்கு மட்டும் அவர் இப்படிச் செய்யவில்லை. இந்த சிவா நஷ்டமடைந்ததால் மட்டும் காப்பாற்றவில்லை. அவருக்கு தெரிந்து யார் நஷ்டமடைந்தாலும் காப்பாற்றிவிட்டவர். இப்படி, எல்லோரையும் அரவணைத்துத் தூக்கிவிடும் மனநிலை கொண்டவர். சினிமாவையும் கடந்து, எந்தவொரு தொழிலிலும் தனக்குத் தெரிந்தவர் ஒருவர் நஷ்டமடைந்தால் அவருக்கு உதவிய பண்புக்குச் சொந்தக்காரர்.

ஆனால், இவையெல்லாம் வெளியே தெரியாது. இப்போது ஊடகங்கள் அதிகமாக இருப்பதால் தகவல்கள் உடனுக்குடன் வெளிவருகின்றன. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன், பத்திரிகைகளில் செய்தி வந்தால்தான் வெளியே தெரியும். இப்படிப்பட்ட செய்திகளைப் பார்க்கவும் முடியும்.

அந்த மாதிரி, கண்ணுக்குத் தெரியாமல் அவர் செய்த உதவிகள் பல. எத்தனையோ பேரைப் படிக்க வைத்திருக்கிறார், இப்படி அந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

உலகத்தில் எந்தவொரு நடிகரும் இத்தனை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை உருவாக்கி இருக்க மாட்டார்கள். ஆனால், விஜயகாந்த் செய்திருக்கிறார்.

54 இயக்குநர்கள், 40-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், எத்தனை எத்தனையோ துணை நடிகர்கள், சண்டைக் கலைஞர்கள், இன்றளவும் திரைத்துறை சார்ந்த படிப்புகள், டிஎஃப்டெக் படிக்க இத்தனை பேர் வருகிறார்கள் என்றால், அன்றைய காலத்தில் ஆபாவாணன், ஆர். கே. செல்வமணி, அரவிந்த்ராஜ் என எத்தனை புதுமுக இயக்குநர்களைத் தமிழ் திரையுலகுக்கு கொடுத்திருக்கிறார் அவர்.

திரைப்படக் கல்லூரி மாணவர்களிடமிருந்து, ‘ஊமை விழிகள்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘புலன் விசாரணை’, ‘கருப்பு நிலா’ என எத்தனையோ சூப்பர் ஹிட் படங்கள் அவர் மூலம் வெளிவந்திருக்கின்றன.

தனக்குத் திருமணம் ஆன பின்னர்தான், விஜயகாந்த் வீட்டுக்கே போனார். பசி எப்படி இருக்கும் என்பதை, மதுரையிலிருந்து சென்னைக்கு சினிமா வாய்ப்புத் தேடி அலைந்த காலத்தில் அவர் உணர்ந்தவர். 20-க்கு 20 அடி படுக்கை, ராவுத்தர் ஆபிஸ் கீத்துக் கொட்டகையில எல்லோரும் தூங்குவோம்.

ஒரு நடிகராக வேண்டுமென்று விஜயகாந்த்தும், இயக்குநராக வேண்டுமென்று ராவுத்தரும் எத்தனையோ சினிமா பட கம்பெனிகளை ஏறி இறங்கிப் பார்த்து, சாப்பாடு இல்லாமல் பசி மயக்கத்தில் அலைந்ததும் மறக்க முடியாதவை. எந்தவொரு நிறுவனமும் வாய்ப்புக் கேட்டு வருகிறவர்களுக்கு சோறு போடாது!

இதெல்லாம் அனுபவித்ததால்தான், விஜயகாந்த்தும் ராவுத்தரும் தங்களுடைய பட நிறுவனத்தைத் தொடங்கி, ஹீரோவில் இருந்து கடைசி லைட்மேன், டிரைவர் என எல்லோருக்கும் ஒரே மாதிரியான சாப்பாடு போட்டார்கள்.

ராவுத்தர் அல்லாமல், வேறு ஒரு தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும்போதுகூட இதையே செய்தவர் விஜயகாந்த்.

ஒருமுறை அவரிடம் நான் கேட்ட விஷயம், “அதிகமாக செலவாமாகுமே, பட்ஜெட் கஷ்டம் ஆகும் என்று சொன்னபோது, அவர் கேட்கிறார், “எவ்வளவு அதிகமாக செலவாகும் சிவா? ஐந்து லட்சம்..” என்றார், உடனே நான் சொன்னேன், “இல்லை ரூ. 3 லட்சம் அதிகமாகும் என்று”, உடனே அவர் சொன்ன பதில், “அப்போ.. என்னுடைய சம்பளத்தை குறைத்துக்கொள்ளுங்கள்.”

ஏவிஎம் ஸ்டுடியோவில், உழவன் மகன் படப்பிடிப்பு, பக்கத்தில் ‘நாயகன்’ படப்பிடிப்பு.

அப்போது, விஜயகாந்த் படப்பிடிப்பு குழுவில் இலை விரித்து, எல்லா வகை பலகாரங்களுடனும் அசைவ விருந்து, கறி, மீன், முழு முட்டை என்று போட்டனர். அன்று, பிற படப்பிடிப்புத் தளங்களில் பொட்டலம் கட்டி சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த காலம்.

நடிகர் விஜயகாந்த் படப்பிடிப்பு என்றால், அசைவ சாப்பாடுதான் என்று வெளியுலகுக்கு தெரியத் தொடங்கியது.

அவரோட அலுவலகத்துக்கு நடிக்க வாய்ப்புக் கேட்டு வருகிறவர்கள் எல்லோரும் சாப்பிட வேண்டும். காலை, மதியம், மாலை மூன்று வேளையும் சாப்பாடு பந்தி நடந்துகொண்டேயிருக்கும்.

சாப்பாடு பந்தியில் இருக்கிறவர்களைப் பார்த்துக் கொண்டேயிருப்பார் விஜயகாந்த். அதுவும், தான் சாப்பிட்ட பலகாரம் எதுவும் மற்றவர்கள் சாப்பிடுகிற இலையில் பரிமாறப்படாமல் இருக்கிறதா என்பதை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒவ்வொரு இலையாகப் பார்த்துக்கொண்டே போவார். அப்படியெதுவும் இல்லாததைப் பார்த்துவிட்டால் அவ்வளவுதான், சமையல்காரர்களிடம் ஆத்திரத்தில் கொந்தளித்து விடுவார்!

பசியோட வலியும் தெரியும். ஏற்றத்தாழ்வு கூடாது என்பதும் கேப்டனுக்கு தெரியும். சினிமா வாழ்க்கையில் வெற்றி தோல்வி எல்லாமே அவருக்கு இருந்தது. தயாரிப்பாளர் நஷ்டமடையக் கூடாது என்பதற்காக, செலவுகளை அதிகப்படுத்தமாட்டார். 24 மணி நேரமும் படப்பிடிப்பு தளத்திலிருந்த இருந்த ஒரே நடிகர் அவர்தான்.

படப்பிடிப்பு இல்லையென்றால் வீடு. இதுதான் கேப்டனுடைய உலகம். நான் ஒரு சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பேன். அவரும் அதையே வாங்கி புகைப்பார்.

படப்பிடிப்பு நேரத்தில் விஜயகாந்த் முதல் ஆளாக வருவார். தாமதமாக யாராவது வந்தால், அதனால் தயாரிப்பாளருக்கு, இயக்குநருக்கு பிரச்னையென்றால் கேப்டனின் கோபம் வேற மாதிரி இருக்கும்.

ஒருநாள்கூட ஸ்டார் ஹோட்டலில் போய் சாப்பிடாத நடிகர் அவர். நான் நேரில் கண்டவை இவை. ஒருநாள் குளிக்கப் போகிறபோது சோப்பு கலரைப் பார்த்துவிட்டு, “என்னடா இது பச்சை கலர் சோப்பு. இப்போ சிவப்பு கலர் சோப்பு விலை எவ்வளவுடா?” (ஹமாம் சோப்போ சிந்தால் சோப்போ அவருக்கு தெரிந்தது நிறம் மட்டும்தான்... அதன் விலை 25 காசுகள்...) அதுக்காக ஆபிஸ் பையனை உரிமையுடன் கோபித்துக் கொள்பவர் கேப்டன்.

அப்படி சேமித்து எத்தனை பேருக்குக் கல்வி உதவி, மருத்துவ உதவி செய்தவர். வெள்ளந்தியான மனிதர் அவர்!

தன் படத்துக்கு எவ்வளவு சம்பளம் என்பதும் அவருக்கே தெரியாது. எல்லாமே ராவுத்தர்தான். வருமான வரித் துறை சோதனை வந்தபோது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலே தெரியவில்லை அவருக்கு.

ஒருகட்டத்தில் அதிகாரியொருவர் விஜயகாந்த்தைக் கடுமையாகப் பேச, எனக்குத் தெரிந்தவற்றைச் சொல்கிறேன் என்று அவருக்கே உரிய பாணியில் கேப்டன் எகிற, அவர் சொன்னவற்றைக் கேட்டுவிட்டு வியந்த அதிகாரிகள் - இவ்வளவு தான, தர்மம் செய்திருக்கிறாரா..! ஒரு படத்தில்கூட முழு சம்பளத்தையும் வாங்காத மனிதர். தான் சம்பாதித்ததில் 80 சதவீதம் ஊருக்காகக் கொடுத்தவர். இப்போது அவருக்கு மிஞ்சியிருப்பது குறைவுதான்.. அதுதான் வியஜகாந்த்...!

தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என யாராவது நஷ்டம், தேவை என்று கேட்டால் கொடுத்து உதவுபவர். என்னை தயாரிப்பாளராக்கிய கேப்டனை நடிக்க வைத்து திரும்பவும் ஒரு படம் எடுக்க வேண்டுமென எண்ணிய நான், அரசியலுக்கு வந்து எம்.எல்.ஏ-ஆன கேப்டனை வைத்து ‘மரியாதை’ என்ற திரைப்படத்தை தயாரித்தேன். ‘வானத்தைப்போல’ வெற்றிக்குப் பின் இயக்குநர் விக்ரமன், விஜயகாந்த், மீனா, மீரா ஜாஸ்மின் ஆகியோரை வைத்து எடுத்த படம் இது.

ஆஸ்திரேலியா வரை சென்று படப்பிடிப்பு நடத்தினோம். அப்போதுகூட வெளியில் ஊர் சுற்றப் போக மாட்டார். படப்பிடிப்பு முடிந்தால் ஹோட்டல் அறைக்கு வந்துவிடுவார். அந்த சமயத்தில் கூட்டணிக்கு கேப்டனை தொடர்புகொள்ள முயற்சிகள் பல நடந்தன. கேப்டனிடம் கேட்டால், “எல்லா பக்கமும் பெட்டி ரெடி! ஆனால், அதை வாங்கிவிட்டு என்ன பண்ணப் போகிறோம்? சாலிகிராமம் வீட்டைத் தாண்டி எனக்கு எதுக்குயா காசு?”என்று சொன்னவர்.

நடிகர் சங்கத்துக்கு ராதா ரவி அண்ணனும் சரத்குமாரும் அழைத்ததால் தலைவரானார் அவர். அப்புறம் கடன் இருக்கிறது என்று தெரிந்ததும், எல்லா நடிகர், நடிகைகளையும் அழைத்துக்கொண்டு சிங்கப்பூர், மலேசியா சென்று நட்சத்திர கலைவிழா நடத்தியவர்.

கடனையும் அடைத்ததுடன், வங்கிக் கணக்கில் பணத்தையும் போட்டு வைத்தார். அந்த நிகழ்ச்சியில் ஒருவர் டோனர் டிக்கெட்டில் பணம் வாங்கிவிட்டு கொடுக்காமல் போய்விட்டார். கலையரங்கம் முழுவதும் பார்வையாளர்கள் நிரம்பியிருக்க, ஆனால், பணம் குறைகிறதே என்று கேட்டபோது, அந்த நபர் பேசிய பதிலைக் கேட்டு கோபமடைந்த கேப்டன், சட்டையைப் பிடித்து சுவருடன் சேர்த்துக் கொண்டுபோய் அவரைத் தாக்க போய்விட்டார். கொஞ்சம் விட்டால், அந்த நபருடைய உயிர் அப்போதே போயிருக்கும்.

சிங்கப்பூர்ல சிசிடிவி இருந்துச்சு. அத சொன்னா அந்த நபர் உடனே போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணிடுவாங்கனு சொல்லியிருக்காரு. வரட்டும் பார்க்கலாம்னு சொன்னாரு விஜயகாந்த். கடைசில வசூல் பணத்த இரண்டு மாதத்துல செட்டில் பண்ணாரு அவரு.

இன்னைக்கு நிச்சயமா விஜயகாந்த் பெயர், நடிகர் சங்க கட்டடம் கட்டி முடித்தவுடன் இருக்கும். அவரோட வாரிசாக அவரது பையன் அரசியலுக்கு விஜயபிரபாகரன், சினிமாவுக்கு சண்முகபாண்டியன் இருக்காங்க.

சண்முகபாண்டியனின் படைத்தலைவன் வெளிவர இருக்கு. பொன்ராம் இயக்கத்துல சசிகுமார் சேர்ந்து நடிக்கிற படமும் போய்ட்டிருக்கு. நானும் அவர வச்சு படம் எடுக்க ரெடியாகிட்டேன். விஜயகாந்த் நடிச்சு கொடுத்து உயரத்துக்கு வந்தவர்களில் விஜய், சூர்யானு பட்டியல் நீளும்.

கேப்டனை வைச்சு 20 படத்துக்கு மேல எஸ். ஏ. சந்திரசேகர் படம் பண்ணாரு. அதுக்காக விஜய்யோட வெற்றிக்கு விஜயகாந்த் பக்கபலமா இருந்தாரு. தன்னோட ரோல் சுருக்கி மத்த நடிகர்களுக்கு அதிகம் கொடுத்தவரு விஜயகாந்த். இனி ஒரு ஸ்டண்ட்ட டூப் இல்லாம ஒருத்தரு பண்ண முடியாது.

ராவுத்தர் சொல்வாரு முரடன்யா அவன். பாத்துக்கோங்கனு. அப்படி ஃபிட்டான கேப்டனை இரண்டு வருஷம் முன்னாடி பிறந்த நாள் சமயத்துல தொண்டர்கள் கத்தியபோது, முடியாத கேப்டன் கையை அசைக்க முற்பட்டது தன்னுள் இருந்த வீரத்தை காட்டுகிறது.

நானும் ஆர். கே. செல்வமணி எல்லாரும் சேர்ந்து போனப்போ விஜயகாந்த் என்ன அடையாளம் கண்டு பார்த்தாரு அவ்ளோதான். அதுக்கப்புறம் டிசம்பர் 28 காலைல அவர் மறைந்த செய்தி 6.30க்கு மேல தெரியவர இதயம் நின்னது. அப்புறம், இந்த ஒரு சூழ்நிலைல இறைவன் அவரைக் கூப்டுகிட்டா நல்லதுனு தோணுச்சு. ஒருசமயம் பரவால எங்க கேப்டன் இங்க கஷ்டப்படக் கூடாதுனு தேத்திக்கிட்டோம். கடவுள் நல்லது செஞ்சா இப்படி ஒரு தண்டனையானு நொந்திருக்கோம். கேப்டன் அரசியலுக்கு வராம போயிருந்தாக்கூட இந்நேரம் நூறு ஜெயிலர் நடிச்சுருப்பாரு. அப்படி, அரசியலுலகூட ஜெயலலிதா ஆட்சிக்காலத்துல கலைஞருக்கு விழா, மெரினாவுல பிரம்மாண்டமா நடத்தி தங்க பேனா கொடுத்தவரு.

பழம் நழுவிப் பாலில் விழும்னு நினைச்சோம். 2016-ல் பாய்ஸன்ல விழுந்தது. தீவுத்திடலில் டிசம்பர் 29-ல் கூடிய கூட்டம் கேப்டனுக்கு அஞ்சலி செலுத்த போனப்போ வாக்கு பலிக்கும்ங்கறது நேர்ல பாத்தேன். எம்ஜிஆர் மறைந்தப்போ கூடிய கூட்டத்தை நானும் கேப்டனும் காரில் போனப்போ பார்த்த கேப்டன், சாவுனா இப்படி இருக்கனும்னு சொன்னாரு.

விஜயகாந்த் கடைசில அவரோட சாவும் அப்படி ஒரு கூட்டத்தை கூட்டிருச்சு. எந்த சமூக வலைத்தளங்கள் கேப்டனை ஏளனம் செய்தனவோ, இன்று ரியல் ஹீரோவா பாக்குது, லப்பர் பந்து போன்று எத்தனை படங்கள் கேப்டனை மையப்படுத்தியவை.

தலைவர்களோட நினைவிடங்கள் சமாதி. ஆனால் விஜயகாந்தின் சமாதி கோயிலாக மாறியுள்ளது. அவர் உழைத்து சம்பாதித்த இடத்திலேயே விஜயகாந்த் உறங்குகிறார்.

அன்று கலைஞர் ஆட்சிக்கு வர 1996-ல் விஜயகாந்த் உதவினார். ஆனால் கேப்டன் மறைந்தபோது, நண்பனுக்கு, முன்னாள் எதிர்க்கட்சி தலைவருக்கு தேசிய முற்போக்கு திராவிடக்கழக தலைவனுக்கு மிகப்பெரிய அஞ்சலியைக் கைமாறாக செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஜீரோ ஹேட்டர்ஸ் கேப்டனுக்கு. அதான் கேப்டன் பிரபாகரன் எங்கள் அண்ணன் விஜயகாந்த். ஈழத்தமிழர் மீதும் பிரபாகரன் மீதும் அவர் வைத்த அன்புக்காக தன் மகனுக்கு பெயர் வைத்தது, சின்ன மாப்பிள்ளையில் முழு தயாரிப்பாளராக நடிகர் பிரபுவிடம் பேசி என்னைத் தயாரிப்பாளராக்கி, நடிகை வடிவுக்கரசி அம்மாவை தயாரப்பாளராக்கி எத்தனை விஷயங்கள்... மனிதக் கடவுள் கேப்டன்!

இதையும் படிக்க | கையைக் காலைக் குறைச்சுக்கவா முடியும்? ரஜினியால் விஜயகாந்த் பட்ட சங்கடம்!

மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்! - வாசுதேவன் நாயர் குறித்து கமல்

மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர்(91) உடல்நலக் குறைவால் காலமானார். அன்னாரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கமல் ஹாசன், "ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.க... மேலும் பார்க்க

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது லாபதா லேடீஸ்!

ஆஸ்கார் விருதுகள் 2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச பிரிவின் இறுதிப்பட்டியல் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.கிரண் ராவ் இயக்கிய லாபதா லேடீஸ், சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படப் பிரிவில் நாட்டின் அத... மேலும் பார்க்க

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

எம். எஸ். சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்பட்டுள்ள விருதை அந்தப் பெயரில் பயன்படுத்த பாடகர் டி. எம். கிருஷ்ணாவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல கா்நாடக இசைப் பாடகி எம். ... மேலும் பார்க்க

புஷ்பா 2: திரையரங்கில் பெண் உயிரிழப்பு - தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு தாக்கல்

அல்லு அர்ஜுன் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஒரு ... மேலும் பார்க்க

சாதனையா? சோதனையா? புஷ்பா - 2 திரை விமர்சனம்

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புடன், வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைக்கப்போகும் படமாக எதிர்பார்க்கப்படும் புஷ்பா - 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளத... மேலும் பார்க்க

புஷ்பா 2: பார்வை, செவித்திறன் குறைபாடுடையோரும் கண்டுகளிக்க சிறப்பு வசதி!

நடிகர்கள் அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில் கூட்டணியில் உருவான புஷ்பா திரைப்படம் மாநில எல்லைகளைக் கடந்து இந்திய அளவில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில்... மேலும் பார்க்க