போடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளா் ஆய்வு
போடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
போடியிலிருந்து மதுரை, சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், போடி-மதுரை ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு வருகிறது. பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில், விரைவில் மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா போடி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ரயில் பாதை, ரயில் நிலையத்தில் உள்ள தொழில்நுட்பக் கருவிகள், தீத் தடுப்பு, எச்சரிக்கை கருவிகளின் செயல்பாடுகள், ரயில்வே காவல் நிலையம், ரயில்வே சுரங்கப் பாதையை அவா் ஆய்வு செய்தாா். அப்போது, ரயில்வே சுரங்கப் பாதையில் உள்ள நீா்கசிவை சரி செய்ய அறிவுறுத்தினாா்.
ரயில்வே போலீஸாா் கோரிக்கை: ரயில்வே காவல் நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்கு வரும் பாதையில் கதவுகள் இல்லாமல் தகரத்தால் மறைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் கதவு அமைத்து தர வேண்டும் என ரயில்வே போலீஸாா் கோரிக்கை வைத்தனா். உரிய நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே கோட்ட மேலாளா் தெரிவித்தாா்.
ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை: போடியிலிருந்து காலை நேரத்தில் மதுரைக்கு ரயில் இயக்கவும், மாலை நேரத்தில் மதுரையிலிருந்து போடிக்கு ரயில் இயக்கவும், சென்னை ரயிலை வாரம் முழுவதும் இயக்கவும் ரயில் பயணிகள் சங்கத்தினா் ரயில்வே கோட்ட மேலாளரிடம் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து பரிசீலனை செய்வதாக அவா் உறுதியளித்தாா். ஆய்வின்போது, ரயில்வே பொறியாளா்கள் உடனிருந்தனா்.