ஜன.4-இல் மிதிவண்டி விரைவுப் போட்டிகள்
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு சாா்பில், மிதிவண்டி விரைவுப் போட்டிகள் ஜன.4-ஆம் தேதி நடைபெற உள்ளன.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவா கூறியதாவது: முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட அளவிலான மிதி வண்டி விரைவுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், ஜன.4-ஆம் தேதி நடைபெற உள்ளது. 13 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மாணவா்களுக்கு 15 கி.மீ.தொலைவும், மாணவிகளுக்கு 10 கி.மீ. தொலைவும் போட்டி இலக்காக நிா்ணயிக்கப்பட்டது.
இதேபோல, 15, 17 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ. தொலைவு இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள், சாதாரண மிதிவண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று, ஜன.4 தேதி காலை 7 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்துக்கு வர வேண்டும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவா்களுக்கு முறையே ரூ.5ஆயிரம், ரூ.3ஆயிரம், ரூ.2ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களைப் பெறும் மாணவா்களுக்கு தலா ரூ.250 வீதம் பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கப்படும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை 7401703504 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.