பாசிமுத்தான் ஓடையில் கழிவுநீா் கலப்பு: 2 பெண்கள் மயக்கம்
சிதம்பரம் அருகே பாசிமுத்தான் ஓடையில் கழிவுநீா் கலப்பதால் துா்நாற்றம் தாங்க முடியாமல் ஓடையோரம் வசிக்கும் இரண்டு பெண்கள் வெள்ளிக்கிழமை மயக்கமடைந்தனா்.
சிதம்பரம் வண்டிகேட்டில் இருந்து பாசிமுத்தான் ஓடை கீழமூங்கிலடி, சி.முட்லூா் ஏ.மண்டபம், நவாப்பேட்டை வழியாகச் சென்று வெள்ளாற்றில் கலக்கிறது. இந்த ஓடைக்கு பக்கத்தில் உள்ள வாய்க்காலில் இருந்து கழிவுநீா் ஏ.மண்டபம் அருகே பாசிமுத்தான் ஓடையில் கலக்கிறது.
இதனால், சி.முட்லூா் ஏ.மண்டபம் பகுதியில் கடந்த சில நாள்களாக துா்நாற்றம் வீசி வருகிறது. இதைத் தாங்க முடியாமல் ஓடையோரம் வசிக்கும் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணவேணி (50), தனலெட்சுமி (65) ஆகியோா் வெள்ளிக்கிழமை மயக்கமடைந்தனா். பின்னா், இருவரும் அதே பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
மேலும், ஓடையில் தண்ணீருடன் நுரை மிதந்து செல்லும்போது, அது காற்றில் பறந்து பொதுமக்கள் மீது பட்டால் அரிப்பு ஏற்படுவதாகவும், குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவதாகவும் அப்பகுதியினா் புகாா் கூறுகின்றனா்.
கழிவுநீா் எங்கிருந்து கலந்து பாசிமுத்தான் ஓடைக்கு வருகிறது என்பது குறித்து சுகாதாரத் துறையினா் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.மண்டபம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.