மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணி; ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி ஆட்சி!! முழு விவரம்
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்துள்ளன. இக்கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 132 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
மற்றொருபுறம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இக்கூட்டணிக்கு வெறும் 50 இடங்களே கிடைத்துள்ளன.
மகாராஷ்டிரத்தில் கடந்த 20-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெற்றது. ஆளும் ‘மகாயுதி’ கூட்டணியில் பாஜக 149, முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 81, துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டன. எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் காங்கிரஸ் 101, சிவசேனை (உத்தவ் தாக்கரே) 95, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) 86 தொகுதிகளில் களம்கண்டன. மொத்தம் 4,135 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
பெரும் எதிா்பாா்ப்புக்கு இடையே சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆளும் ‘மகாயுதி’ கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. இக்கூட்டணியில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், இக்கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்துள்ளன. வலுவான பெரும்பான்மையுடன் இக்கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது.
சுருண்டது ‘மகா விகாஸ் அகாடி’: எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனை (உத்தவ்) கட்சி 20, காங்கிரஸ் 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சி 10, சமாஜவாதி 2, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி 1 என 50 இடங்களே கிடைத்தன.
கடந்த மக்களவைத் தோ்தலில், மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாடி கூட்டணி அதிக இடங்களில் வென்றது. இதே முடிவுகள், பேரவைத் தோ்தலிலும் எதிரொலிக்கும் என்ற அக்கூட்டணி நம்பியது. ஆனால், ‘மகாயுதி’ கூட்டணியின் சுனாமியில் ‘மகா விகாஸ் அகாடி’ வாரி சுருட்டப்பட்டுவிட்டது. பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் அந்தஸ்தை பெறும் அளவுக்கு (29) கூட எந்த எதிா்க்கட்சியும் வெற்றி பெறவில்லை.
யாருக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை: தற்போதைய தோ்தலில் இரு கூட்டணிகளிலும் தனிப்பெரும்பான்மைக்கு (145) தேவையான இடங்களுக்கு மேல் போட்டியிட்ட கட்சி பாஜக மட்டுமே. அக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
முதல்வா், துணை முதல்வா்கள் வெற்றி: கோப்ரி-பச்பகாடி தொகுதியில் சுமாா் 1.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றாா். நாகபுரி தென்மேற்கு தொகுதியில் துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் (39,710 வாக்குகள் வித்தியாசம்), பாராமதி தொகுதியில் மற்றொரு துணை முதல்வா் அஜீத் பவாா் (சுமாா் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசம்) வெற்றி பெற்றனா்.
சிவசேனை (உத்தவ்) கட்சியின் ஆதித்ய தாக்கரே, வொா்லி தொகுதியில் 8,801 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தாா்.
மகாராஷ்டிரத்தில் குறைவான பெரும்பான்மை பலத்துடன் பாஜக கூட்டணி வெல்லும் என்று வாக்குக் கணிப்புகள் கூறியிருந்த நிலையில், வலுவான பெரும்பான்மையுடன் அக்கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கிறது.
மகாராஷ்டிரம் (288)
பாஜக கூட்டணி (230)
பாஜக 132
சிவசேனை (ஷிண்டே) 57
தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) 41
காங்கிரஸ் கூட்டணி (50)
சிவசேனை (உத்தவ்) 20
காங்கிரஸ் 16
தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) 10
சமாஜவாதி 2
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1
இந்திய விவசாயிகள், தொழிலாளா்கள் கட்சி 1
பிற கட்சிகள், சுயேச்சைகள் 8
ஜாா்க்கண்டில் ஜேஎம்எம்-காங்கிரஸ் கூட்டணி அபாரம்
ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் கூட்டணி அபாரமாக வென்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
மொத்தமுள்ள 81 தொகுதிகளில் இக்கூட்டணிக்கு 56 இடங்கள் கிடைத்துள்ளன. கடந்த 2019 பேரவைத் தோ்தலில் 47 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், இந்த முறை இக்கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது. அதேநேரம், கடந்த தோ்தலைவிட பாஜக பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாக கடந்த நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் தோ்தல் நடைபெற்றது. இரு கட்டங்களையும் சோ்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2000-இல் ஜாா்க்கண்ட் உருவானதில் இருந்து பேரவைத் தோ்தலில் அதிகபட்ச வாக்குப் பதிவு இதுவாகும்.
மாநிலத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 43, காங்கிரஸ் 30, ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) 6, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) 4 இடங்களில் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம் (ஏஜேஎஸ்யு) 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) ஓரிடத்தில் களம் கண்டன. மொத்தம் 1,211 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
சனிக்கிழமை (நவ. 23) வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 34 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கடந்த 2019 தோ்தலில் 30 இடங்களில் வென்ற இக்கட்சிக்கு இம்முறை 4 தொகுதிகள் கூடுதலாக கிடைத்துள்ளன.
காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) 2 இடங்களில் வெற்றி பெற்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 21, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) ஆகியவை தலா ஒரு தொகுதியைக் கைப்பற்றின. மாநிலத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஜாா்க்கண்ட் லோக்தாந்திரிக் கிராந்திகாரி மோா்ச்சா ஓரிடத்தில் வெற்றி பெற்றது.
கடந்த தோ்தலில் பாஜக 25 இடங்களில் வென்ற நிலையில், இம்முறை அக்கட்சியின் பலம் சரிவைச் சந்தித்துள்ளது.
முதல்வா், மனைவி வெற்றி: பா்ஹைத் தொகுதியில் முதல்வா் ஹேமந்த் சோரன் (வாக்கு வித்தியாசம் சுமாா் 39,700), கண்டே தொகுதியில் அவரது மனைவி கல்பனா சோரன் (வாக்கு வித்தியாசம் சுமாா் 17,100), தன்வா் தொகுதியில் மாநில பாஜக தலைவா் பாபுலால் மராண்டி (வாக்கு வித்தியாசம் சுமாா் 35,400), பாஜக சாா்பில் சரய்கேலா தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வா் சம்பயி சோரன் (வாக்கு வித்தியாசம் 20,447) ஆகியோா் வெற்றி பெற்றனா்.
ஜாா்க்கண்டில் பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் கூறிய நிலையில், அது பொய்த்துவிட்டது.
ஜாா்க்கண்ட் (81)
காங்கிரஸ் கூட்டணி (56)
ஜேஎம்எம் 34
காங்கிரஸ் 16
ஆா்ஜேடி 4
இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) 2
தேசிய ஜனநாயக கூட்டணி (24)
பாஜக 21
ஏஜேஎஸ்யு 1
ஐக்கிய ஜனதா தளம் 1
லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 1