மகாராஷ்டிரா: பாஜக வளர்ந்து ஆட்சியை பிடித்தது எப்படி..? இதுவரை நடந்த தேர்தல்கள் ஒரு பார்வை..!
மகாராஷ்டிரா அரசியல் களம்
மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. நாட்டின் பொருளாதார தலைநகரமாக மும்பை இருப்பதாலும், நாட்டின் வளர்ச்சியில் மகாராஷ்டிரா முக்கிய பங்கு வகிப்பதாலும் இந்த சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மகாராஷ்டிரா தேர்தல் அரசியலை 1995-க்கு முன்பு 1995-க்கு பின்பு என்று பிரிப்பதுதான் சரியாக இருக்கும். 1960-ம் ஆண்டில் இருந்து 1995-ம் ஆண்டு வரை மகாராஷ்டிராவில் பெரும்பாலும் காங்கிரஸ் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. தற்போது கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி ஆட்சி நடந்து வரும் மகாராஷ்டிராவிற்கு கூட்டணி ஆட்சி ஒன்றும் புதிதல்ல.
1978ம் ஆண்டு நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு விலக்கிக்கொண்ட பிறகு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் இந்திரா காங்கிரஸ் தனியாகவும், காங்கிரஸ்(ஒ) தனியாகவும் போட்டியிட்டு கூட்டாட்சியை அமைத்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவாரும் இடம் பெற்று இருந்தார்.
சரத்பவார் ஆட்சி.. டிஸ்மிஸ் செய்த இந்திரா காந்தி
ஆனால் சரத்பவார் திடீரென சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தனியாக பிரித்து வந்து ஜனதா கட்சி உள்பட சில எதிர்க்கட்சிகளின் துணையோடு சரத்பவார் ஆட்சியமைத்தார். காங்கிரஸ் பிரிவினைக்கு அப்போதே சரத் பவார் வழிவகுத்தார். இந்திரா காந்தி மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது சரத்பவார் அரசை டிஸ்மிஸ் செய்தார். 1990-ம் ஆண்டு வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆட்சிக்கே மக்கள் ஆதரவு கொடுத்து வந்தனர். 30 ஆண்டுகள் எந்த வித எதிர்ப்பையும் சந்திக்காத காங்கிரஸ் இப்போது கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது.
சிவசேனா
மறைந்த பால்தாக்கரே 1972ம் ஆண்டு சிவசேனாவை ஆரம்பித்து தேர்தலை சந்தித்தார். இத்தேர்தலில் சிவசேனா ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 1978ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவசேனா வெற்றி பெறவில்லை.
சிவசேனாவிற்கு போட்டியாக பா.ஜ.க
ஆனால் 1980ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல் முறையாக பா.ஜ.க மகாராஷ்டிராவில் கால் பதித்தது. அக்கட்சி 14 தொகுதியில் வெற்றி பெற்று சிவசேனாவிற்கு போட்டியாக களத்தில் குதித்தது. 1985ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் பா.ஜ.க 16 தொகுதியில் வெற்றி பெற்றது. இதில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது. சரத்பவார் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.
பா.ஜ.க, சிவசேனா கூட்டணி ஆட்சி
1990ம் ஆண்டு தேர்தலில் சிவசேனா 52 தொகுதியிலும், பா.ஜ.க 42 தொகுதியிலும் வெற்றி பெற்று வழுவான காவி கூட்டணியை மகாராஷ்டிராவில் உருவாக்கினர்.1995ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக காங்கிரஸ் மகாராஷ்டிராவில் ஆட்சியை இழக்கிறது. அத்தேர்தலில் சிவசேனாவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.
இதில் சிவசேனா 73 தொகுதியிலும், பா.ஜ.க 65 தொகுதியிலும் வெற்றி பெற்று முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு மனோகர் ஜோஷி தலைமையில் அமைந்தது.
காங்கிரஸ் பிளவு..
30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 1995ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முதல் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு காங்கிரஸ் கட்சி சரத்பவார் தலைமையில் பிளவைச் சந்தித்தது.
1999ம் ஆண்டு சரத்பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாகவே தேர்தலில் போட்டியிட்டன. அப்போதும் கூட மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே வாக்களித்தனர். அத்தேர்தலில் காங்கிரஸ் 75 தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் 58 தொகுதியிலும் பெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தன.
2004 காங்கிரஸ் வெற்றி..
2004ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் புதிய திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் 71 தொகுதியிலும், காங்கிரஸ் 69 தொகுதியிலும் வெற்றி பெற்றன.
ஆனாலும் சரத்பவார் தனது கட்சிக்கு முதல்வர் பதவியை வைத்துக்கொள்ளாமல் காங்கிரஸ் கட்சியிடம் முதல்வர் பதவியை கொடுத்தார்.
2009 சிவசேனாவை முந்திய பா.ஜ.க
இந்த தேர்தலிலும் பா.ஜ.கவை விட சிவசேனா அதிக தொகுதியில் வெற்றி பெற்றது. 2009ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல் முறையாக சிவசேனாவைவிட பா.ஜ.க அதிக தொகுதியில் வெற்றி பெற்றது. ஆனாலும் மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கே ஆதரவு கொடுத்தனர்.
2014 பா.ஜ.க வெற்றி
2014-ம் ஆண்டு தேர்தலில் பால் தாக்கரே இறந்துவிட்டநிலையில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா தேர்தலை சந்தித்தது. இத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக பா.ஜ.க. 122 தொகுதியிலும், சிவசேனா வெறும் 63 தொகுதியிலும் வெற்றி பெற்றன. இதனால் முதல்வர் பதவி பா.ஜ.கவிடம் சென்றது. இத்தேர்தல் சிவசேனாவிற்கு பெரிய பின்னடைவாகவே அமைந்தது.
1995ம் ஆண்டுக்கு பிறகு 2014ம் ஆண்டு மீண்டும் பா.ஜ.க கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்தது. மகாராஷ்டிரா மக்கள் தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவாளர்களாகவே இருந்து வந்துள்ளனர். இடையில் கட்சியில் பிளவு, தலைவர்கள் ஓட்டம், ஸ்திரத்தன்மையற்ற தலைமை போன்ற காரணங்களால் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பி இருக்கின்றனர்.
உத்தவ் தாக்கரேவை முதல்வராக்கிய சரத்பவார்
2019ம் ஆண்டு தேர்தலில் சிவசேனாவும், பா.ஜ.கவும் கூட்டணி அமைத்துதான் தேர்தலை சந்தித்தது. ஆனால் இத்தேர்தலிலும் பா.ஜ.கவின் கை ஓங்கியே இருந்தது. 106 தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்ற நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா வெறும் 56 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்படி இருந்தும் தங்களுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி கொடுக்கவேண்டும் என்று உத்தவ் தாக்கரே பிடிவாதமாக இருந்தார்.
ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறிக்கொண்டிருந்தார். இதனால் நடுவில் புகுந்த சரத்பவார், உத்தவ் தாக்கரேயை தங்களது பக்கம் இழுத்து வந்து அவரையே முதல்வராக்கினார். இந்த மாற்றம் தான் உத்தவ் தாக்கரே மற்றும் சரத்பவார் ஆகியோர் தங்களது கட்சியை இழக்க காரணமாக அமைந்தது.
சரத்பவார் பாணியில் ஆட்சியை பிடித்த பா.ஜ.க
உத்தவ் தாக்கரே ஆட்சிக்கு வந்த பிறகு அவரது அரசை கவிழ்க்க தேவேந்திர பட்னாவிஸ் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தார். இதில் பட்னாவிஸிடம் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே சிக்கினார். 2022ம் ஆண்டு உத்தவ் தாக்கரே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்ததை பயன்படுத்தி பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களை தங்களது பக்கம் இழுத்து சிவசேனாவை உடைத்தது பா.ஜ.க , சரத்பவார் பயன்படுத்திய அதே ஆயுதத்தை பா.ஜ.கவும் பயன்படுத்தியது. வெறும் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்த ஏக்நாத் ஷிண்டேயிக்கு பா.ஜ.க முதல்வர் பதவியை வழங்கியது.
2023ம் ஆண்டு மீண்டும் அஜித்பவாருக்கும் முதல்வர் ஆசையை காட்டி தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் பா.ஜ.க உடைத்தது.
மக்கள் தீர்ப்பு வரும் 23ம் தேதி தெரியும்...
இப்போது சரத்பவாரும், உத்தவ் தாக்கரேயும் தங்களது கட்சியை இழந்து புதிய அடையாளத்துடன் தற்போதைய சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கின்றனர். ஏற்கெனவே இந்த ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலை இக்கட்சிகள் சந்தித்தாலும் இப்போது நடக்கும் தேர்தல்தான் நான்கு கட்சிகளின் எதிர்காலம் மற்றும் செல்வாக்கை நிரூபிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.
இப்போது மக்களும் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். சரத்பவார், உத்தவ் தாக்கரே ஆகியோர் தங்களது கட்சி பறிபோய்விட்டதாக கூறி அனுதாபத்தின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கின்றனர்.
ஆனால் பா.ஜ.க கூட்டணி அரசு, அனைத்து பெண்களுக்கும் மாதம் 1500 ரூபாய் வங்கிக்கணக்கில் போட்டுவிட்டு அதனை கூறி ஓட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறது. மக்கள் யாரிடம் செல்வார்கள் என்பது வரும் 23ம் தேதிதான் தெரிய வரும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb