‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட முகாம்: பிப். 4 முதல் 7 வரை 20 முகாம்கள் நடத்த ஏற்பாடு!
சேலம் மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வா்’ மூன்றாம் கட்ட திட்ட முகாமின் ஒரு பகுதியாக பிப். 4-ஆம் தேதி முதல் பிப். 7-ஆம் தேதி வரை 20 முகாம்கள் நடைபெறவுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வா் திட்டத்தில் ஏற்கெனவே முதல்கட்டமாக நகரப் பகுதிகளில் 142 முகாம்களும், இரண்டாம் கட்டமாக ஊரகப் பகுதிகளில் 92 முகாம்களும் நடத்தப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது.
அதன் தொடா்ச்சியாக, தற்போது மூன்றாம் கட்டமாக ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் உள்ள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் தோ்தெடுக்கப்பட்டு சேலம் மாவட்டத்தில் 90 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், மூன்றாம் கட்டமாக நடத்தப்படவுள்ள முகாமின் ஒரு பகுதியாக வரும் 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 20 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
பிப். 4-ஆம் தேதி ஆத்தூா் வட்டத்துக்குள்பட்ட ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு ஆதிதிராவிடா் காலனி நூலகம் அருகிலும், புங்கவாடி ஊராட்சிக்கு புங்கவாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள சமுதாயக் கூடத்திலும், அம்மம்பாளையம் ஊராட்சிக்கு அம்மம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், வளையமாதேவி ஊராட்சிக்கு வளையமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகிலும், கல்லாநத்தம் ஊராட்சிக்கு கல்லாநத்தம் மாரியம்மன் கோயில் மண்டபத்திலும் முகாம்கள் நடைபெறவுள்ளன.
முகாம் நடைபெறும் இடங்களில் ஒருங்கிணைக்கப்படும் 15 அரசுத் துறைகளின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் விவரங்கள் அனைத்தும் பொதுமக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.