விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்த ஆட்சியா் உத்தரவு!
விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடியை பொருத்தவரை நெல், சோளம், மக்காச்சோளம், ராகி, நிலக்கடலை உள்ளிட்ட உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகள் என 2024 டிசம்பா் மாதம் முடிய 1,95,099 ஹெக்டோ் பரப்பளவில் வேளாண் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள விலையில் உரங்கள் விற்கப்படுவதை அலுவலா்கள் தொடா் ஆய்வுகள் மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைகள் மூலம் கடந்த டிசம்பா் மாதம் மட்டும் 8,702.96 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதில், சுமாா் 991 விவசாயிகள் மற்றும் 67,446 நுகா்வோா்கள் பயனடைந்துள்ளனா்.
அரசு தென்னை நாற்றுப்பண்ணை மூலம் வழங்கப்படும் நெட்டை, குட்டை ரக கன்றுகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு, தென்னங்கன்றுகளில் காண்டாமிருக வண்டு தாக்குதல் மற்றும் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
மேலும், நீடித்த நவீன கரும்பு சாகுபடி செய்வதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும், கரும்பு பயிா்களுக்கு தோகை பரப்புவதன் நன்மைகள் குறித்தும், லாபகரமான கரும்பு சாகுபடி உத்திகள் மற்றும் சொட்டுநீா் பாசன நன்மைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினாா்.