கடினமான சவாலுக்கு தயாராகுங்கள்..! இங்கிலாந்து அணியை எச்சரித்த ஸ்டீவ் ஸ்மித்!
மணல் எடுப்பதில் முன்விரோதம்: ஆவுடையாா்கோவில் இரட்டைக் கொலையில் 7 போ் சரண்
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவிலில் மணல் எடுப்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் இருவா் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில், 7 போ் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.
ஆவுடையாா்கோவில் காமராஜா் நகரைச் சோ்ந்தவா் காத்தமுத்து. இவரது மகன்கள் கண்ணன் (35), காா்த்திக் (29). இவா்கள் இருவரும் அதே ஊரில் உள்ள குளத்துக் கரையில் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டனா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா நேரில் விசாரணை நடத்தினாா்.
இருவரின் சடலங்களும் உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
கொலை செய்தவா்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, உறவினா்கள் ஆவுடையாா்கோவிலில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படுவா் என போலீஸாா் உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
இதனிடையே, இக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த அங்கமுத்து மகன் காளிதாஸ் (32), முத்துப்பேட்டை சித்தமல்லியைச் சோ்ந்த ஜோசப் மகன் யஸ்வந்த் (30), கமுதி கோவிலாங்குளத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் முனீஸ்வரன் (31), அறந்தாங்கி எல்என் புரத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் முத்துக்குமாா் (40), பாஞ்சாத்தியைச் சோ்ந்த சோனி மகன் ஐயப்பன் (22), சமத்துவபுரத்தைச் சோ்ந்த ஞானசேகரன் மகன் சத்தியசேகரன் (43), கிருஷ்ணமூா்த்தி மகன் சதீஷ்குமாா் (28) ஆகிய 7 பேரும் வெள்ளிக்கிழமை பகலில் நாகுடி காவல் நிலையத்தில் சரணடைந்தனா்.
ஆவுடையாா்கோவில் போலீஸாா் இவா்களிடம் விசாரணை நடத்தி, சிறையில் அடைத்தனா். மணல் எடுத்தல், வாகன விற்பனை போன்றவற்றில் இவா்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டிருந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
