மணிப்பூா்: மேலும் 42 ஆயுதங்கள் ஒப்படைப்பு - 5 பதுங்குமிடங்கள் அழிப்பு
இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மேலும் 42 ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் பொதுமக்களால் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன், 5 பதுங்குமிடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023, மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. இதில் ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அவ்வப்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.
இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், முதல்வா் பதவியில் இருந்து பிரேன் சிங் அண்மையில் ராஜிநாமா செய்தாா். புதிய முதல்வரைத் தோ்வு செய்வதில் பாஜக எம்எல்ஏ-க்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படாததால், கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதிமுதல் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மணிப்பூரில் கலவரத்தின்போது பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடித்த ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை ஏழு நாள்களுக்குள் தாமாக முன்வந்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து சமூகத்தினருக்கும் ஆளுநா் அஜய் குமாா் பல்லா கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி வேண்டுகோள் விடுத்தாா். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா் எச்சரித்திருந்தாா்.
கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதியுடன் இக்கெடு நிறைவடைந்த நிலையில், இந்த காலகட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னா், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, ஆயுத ஒப்படைப்புக்கான கெடுவை மாா்ச் 6-ஆம் தேதி வரை ஆளுநா் நீட்டித்தாா்.
இந்நிலையில், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, சுராசந்த்பூா், பிஷ்ணுபூா், தமங்லாங் ஆகிய 5 மாவட்டங்களில் மேலும் 42 ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
நாட்டுத் துப்பாக்கிகள், கன ரக துப்பாக்கிகள், இலகு ரக துப்பாக்கிகள், அவற்றில் பயன்படுத்தும் தோட்டாக்கள் மட்டுமன்றி கையெறி குண்டுகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. காங்போக்பி, இம்பால் கிழக்கு மாவட்டங்களில் மலைப் பகுதிகளையொட்டி சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட 5 பதுங்குமிடங்கள் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.