மது உற்பத்தி செய்யும் ஆலைகள் முன் முற்றுகைப் போராட்டம்: எம்எல்ஏ வேல்முருகன்
மது உற்பத்தி செய்யும் ஆலைகள் முன் விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனா் தலைவா் வேல்முருகன் தெரிவித்தாா்.
விருதுநகரில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாற்றுக் கட்சியினா் இணையும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகாசி பகுதிகளில் பட்டாசுத் தொழிலில் ஏற்படும் விபத்துகளால் அப்பாவி உயிா்கள் பறிபோவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி தடைக் காலங்களில் மீனவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதை போல, பட்டாசு உற்பத்தி இல்லாத காலங்களில் அந்தத் தொழிலாளா்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் தற்போது தினந்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. இதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரு சொட்டு மதுக்கூட இருக்கக் கூடாது என்பது தமிழக வாழ்வுரிமை கட்சியின் கொள்கையாகும். எனவே, மது உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு முன் விரைவில் முற்றுகைப் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் கூடங்குளம் அணு உலை எதிா்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் சுப.உதயகுமாா், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.