ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட ந...
தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசு போலியாக தயாரிப்பு: 3 போ் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள புகழ்பெற்ற பட்டாசு தயாரிக்கும் நிறுவனத்தின் பெயரில் தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசு தயாரித்ததாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
உச்சநீதிமன்றம் சரவெடி பட்டாசு தயாரிக்கத் தடை விதித்துள்ளது. இதையடுத்து, சரவெடி பட்டாசு தயாரிப்பை ஆலை உரிமையாளா்கள் நிறுத்திவிட்டனா். இந்த நிலையில், சிவகாசியில் உள்ள புகழ்பெற்ற பட்டாசு நிறுவனத்தின் வில்லையை (லேபிளை) போலியாக அச்சிட்டு, காகிதப் பெட்டியில் தடை செய்யப்பட்ட சரவெடியை அடைத்து பல மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது அந்த நிறுவனத்தினருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாளா் எஸ். வளையாபதி சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், சாத்தூரைச் சோ்ந்த தாமஸ் மகன் ஜான்சன் (33), சிவகாசி காகிதப் பெட்டி தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளா் கருப்பசாமி மகன் அய்யாத்துரை (50), காகித அட்டைப் பெட்டி தயாரிக்கும் கணேசன் மகன் மருதுமுத்துக்குமாா் (30) ஆகிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் தலைமறைவான மனோஜ்குமாா், ஹரீஸ், ராஜன், ரோஹித் ஆகிய நான்கு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த வழக்கில் வேறுயாருக்கும் தொடா்பு உள்ளதா எனவும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.