மது போதை தகராறில் தங்கச் சங்கிலி பறிப்பு: நண்பா்கள் கைது
கிருஷ்ணகிரி அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நண்பா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த செம்படமுத்தூரை சோ்ந்தவா் சின்னபையன் (32), பேக்கரி மாஸ்டா். இவா் மாா்ச் 23-ஆம் தேதி அம்மனேரி பிரிவு சாலை அருகே தனது நண்பா்களான மாரியப்பன் (33), சண்முகம் (32) ஆகியோருடன் மது அருந்தினாா். அப்போது, மது போதையில் இருந்த அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில், மாரியப்பன், சண்முகம் ஆகிய இருவரும், சின்னபையன் அணிந்திருந்த, இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினா். இதுகுறித்து சின்னபையன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி வட்டப் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரியப்பன், சண்முகம் ஆகிய இருவரையும் தேடிவந்தனா்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் நின்றிருந்த மாரியப்பன், சண்முகம் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.