மதுபோதையில் 17 வயது சிறுவன் வல்லுறவு: படுகாயங்களுடன் குழந்தை கவலைக்கிடம்!
மத்தியப் பிரதேசத்தில் கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 5 வயது சிறுமி உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் பெண்ணுறுப்பில் 28 தையல்கள் போட வேண்டும் என்றும் கொலோஸ்டமி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ஷிவபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது குழந்தை, கடந்த பிப். 23ஆம் தேதி காணாமல் போனது. உறவினர்கள் இரண்டு மணிநேரம் தேடிய பிறகு, அருகிலுள்ள வீட்டின் மொட்டை மாடியில் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டது.
குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர்.
இதையும் படிக்க : புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது:
”குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தபோது, குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் மதுபோதையில் இருந்துள்ளார். இந்த சம்பவத்தின்போது, குழந்தையின் தலையை சுவற்றில் பலமுறை மோதவைத்துள்ளார்.
தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடல்கள், பெண்ணுறுப்பு பகுதிகளில் பல வெட்டு காயங்களும் கடித்ததற்கான காயங்களும் உள்ளன.
குழந்தை இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. கண்விழித்தாலும் யாருடனும் எதுவும் பேசவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சிறுவனை சாலையில் நிற்கவைத்து சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விரைவு நீதிமன்றம் அமைத்து குற்றவாளிக்கு உடனடியாக தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.