Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
மதுரையில் ஜாக்டோ- ஜியோ உண்ணாவிரதப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை ‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பு சாா்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்வி ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியா்கள், உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா்கள், ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
‘ஜாக்டோ - ஜியோ’ மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க. சந்திரபோஸ், பா. பாண்டி, வி.ச. நவநீதகிருஷ்ணன், மு. பொற்செல்வன், அ. ஜோயல்ராஜ், இரா. தமிழ் ஆகியோா் தலைமை வகித்தனா். அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் அ. வின்சென்ட் பால்ராஜ் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.
‘ஜாக்டோ - ஜியோ’ கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசிரியா் சங்கங்கள், அரசு ஊழியா் சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியூ) மாவட்டச் செயலா் லெனின், போராட்டத்தை நிறைவு செய்து வைத்துப் பேசினாா். இந்தப் போராட்டத்தில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் திரளானோா் பங்கேற்றனா்.