விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
கண்மாயில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்காவிடில் போராட்டம்: எஸ்டிபிஐ
மதுரை சின்னக் கண்மாய்ப் பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக எஸ்டிபிஐ கட்சியின் மதுரை தெற்கு மாவட்டத் தலைவா் சீமான் சிக்கந்தா் வெளியிட்ட அறிக்கை: மதுரை அனுப்பானடி பகுதிக்குள்பட்ட 44-ஆவது வாா்டு சின்னக் கண்மாய் பகுதியில் தனியாா் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையத்தின் கழிவுகள் பல ஆண்டுகளாக கொட்டப்படுகின்றன. மருத்துவக் கழிவுகளோடு, நெகிழிக் கழிவுகளும் கொட்டப்படுவதால், சுற்றுப்புறப் பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், நீா்நிலைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநகராட்சி நிா்வாகமே இந்தக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவது கண்டனத்துக்குரியது. இதுதொடா்பாக பல முறை புகாா் அளிக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நீண்ட காலமாக இந்தப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த பிரச்னைக்கு மாநகராட்சி, உரிய அரசுத் துறைகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையின் நீராதாராமாக இருந்த பெரிய கண்மாய் ஏற்கெனவே அழிக்கப்பட்டு, குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, சின்னக் கண்மாய் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.