Edappadi - Amit shah இடையே போடப்பட்ட டீல் - அண்ணாமலை நிலை என்ன?
கட்டுமானப் பொருள்களின் விலை: குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி
கட்டுமானப் பொருள்களின் விலையை முறைப்படுத்த மாநில அளவில் குழு அமைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கந்தசாமி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கான மூலப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வீடு, வணிக நிறுவனங்கள் கட்டுவோா் மட்டுமன்றி, ஒப்பந்ததாரா்களும் பாதிக்கப்படுகின்றனா்.
மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட எம். சாண்ட் உரிமையாளா்கள் தற்போது யூனிட்டுக்கு ரூ. 5,000 விலையை உயா்த்தியுள்ளனா். எம்.சாண்ட் மட்டுமன்றி, கிராவல், சரளைக் கல் போன்றவற்றின் விலையும் அதிகரித்துவிட்டது.
எனவே, சுரங்க குவாரி பொருள்கள், உலோகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியக் கட்டுமானப் பொருள்களின் விலையை முறைப்படுத்த மாநில அளவில் ஒரு குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு அரசின் கொள்கை முடிவோடு தொடா்புடையது என்பதால், மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.