விண்வெளிப் பூங்காவுக்கு நிலம்: தற்போதைய நிலையே தொடர உயா்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம், ஆதியாக்குறிச்சியில் விண்வெளிப் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தத் தடை கோரிய வழக்கில், தற்போதைய நிலையே தொடரலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியை அடுத்த கொட்டாங்காடு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: ஆதியாக்குறிச்சியில் விண்வெளிப் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. ஆதியாக்குறிச்சி பகுதியில் ஏற்கெனவே பல்வேறு திட்டங்களுக்காக சுமாா் 4,000 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், விண்வெளிப் பூங்காவுக்காக நிலம் கையகப்படுத்தினால், இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். நிலம் கையகப்படுத்துவது தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. இந்தப் பகுதி மக்களுக்கான மறு குடியமா்வு, மறுவாழ்வு வசதிகளைச் செய்யாமல் நிலம் கையகப்படுத்தும் பணிக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், இந்த வழக்கு தொடா்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஆதியாக்குறிச்சியில் விண்வெளிப் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், தற்போதைய நிலையே தொடர வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.