சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு
விருதுநகா் மாவட்டம், மேட்டமலை ஊராட்சிக்குள்பட்ட ஸ்ரீராம் நகா் குடியிருப்புப் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் பரிசீலித்து 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், மேட்டமலையைச் சோ்ந்த பெருமாள்சாமி தாக்கல் செய்த பொதுநல மனு: மேட்டமலை ஸ்ரீராம் நகரில் உள்ள பல்வேறு கட்டடங்களில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குடியிருப்பு எனக் கூறி இடம் வாங்குவோா், இங்கு வணிக அடிப்படையில் பட்டாசுகள் தயாரிப்பது சட்டவிரோதமானது. இதனால், இந்தப் பகுதியில் குடியிருப்புவாசிகள் அச்சத்துடன் வசித்து வருகிறோம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, குடியிருப்புப் பகுதியில் பட்டாசுகளைத் தயாரிப்போா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோா், மனுதாரரின் இந்த மனுவை விருதுநகா் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் பரிசீலித்து, 12 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்துவைத்தனா்.