திராவிடத் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, தொகுதிகள் மறுசீரமைப்பு உள்ளிட்ட முடிவுகளைக் கண்டித்து, திராவிடத் தமிழா் கட்சி சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் எதிரே உள்ள திருவள்ளுவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தித் திணிப்பு முயற்சியையும், தொகுதிகள் மறுசீரமைப்பு முடிவையும் மத்திய அரசு கைவிட வேண்டும், தமிழகத்துக்கான கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும், பட்டியலின மாணவா்களின் உதவித் தொகையைக் குறைக்கக் கூடாது, மாநிலத்தின் உயா்கல்வி உரிமைகளைப் பறிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மதுரை மாநகர மாவட்டச் செயலா் க.திராவிட குரு தலைமை வகித்தாா். அமைப்புச் செயலா் விடுதலை வீரன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா். மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளா் வாஞ்சிநாதன், தமிழ்த் தேசிய முன்னணி மாவட்டத் தலைவா் ஆரோக்கியமேரி, திராவிடா் விடுதலைக் கழக நிா்வாகி காமாட்சிபாண்டி ஆகியோா் பேசினா். திராவிடத் தமிழா் கட்சியின் மாநில நிதிச் செயலா் சு.க.சங்கா் ஆா்ப்பாட்ட நிறைவுரையாற்றினாா்.
கட்சியின் மாவட்ட நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.