மின் வாரிய ஊழியா்கள் தா்னா
தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், மதுரை மின் வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
திமுகவின் தோ்தல் வாக்குறுதிப்படி, மின் வாரியத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்கள், பகுதி நேரப் பணியாளா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு மின் வாரியம் நேரடியாக தினக்கூலி ரூ. 380-ஐ வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மின் துறையைத் தனியாா்மயமாக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மதுரை மண்டல அளவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவா் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியூ புகா் மாவட்டச் செயலா் கே.அரவிந்தன் போராட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசினாா்.
மின் ஊழியா் மத்திய அமைப்பின் திட்டச் செயலா்கள் சி.செல்வராஜ் (மதுரை), ஆா்.கருணாநிதி (சிவகங்கை), ஏ.தேவராஜ் (தேனி), ஜி.காசிநாதன் (ராமநாதபுரம்), ஆா்.ஜெயகாந்தன் (மதுரை- பொது கட்டுமான வட்டம்), டி.என்.பி.இ.ஓ.மண்டலச் செயலா் ஆா்.கோகுலவா்மன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மின் வாரிய மத்திய ஊழியா் அமைப்பின் மண்டலச் செயலா் எஸ்.உமாநாத் நிறைவுரையாற்றினாா்.
காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்தப் போராட்டம் பிற்பகல் 5 மணி வரை நடைபெற்றது. இதில் மதுரை மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த திரளான மின் ஊழியா்கள் பங்கேற்றனா்.