Water Bottle: குடுவை, பிளாஸ்டிக் பாட்டிலான கதை! - சுவாரஸ்யமான பின்னணி | Explainer
``தாயையும் தண்ணியையும் பழிக்கக் கூடாது..." என ஒரு பழமொழி உண்டு. தாயும், தண்ணீரும் உயிரை உருவாக்கி, வளர்த்து, காக்கும் ஆற்றல் பெற்றவர்கள். நீரின்றி அமையாது உலகு என்றான் வள்ளுவன். 'கத்திரி வெயில்' தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் மெல்ல சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இனி தண்ணீரின் கூடுதல் அவசியம் சொல்லத் தேவையில்லை. சென்னை போன்ற நகரவாசிகள் தண்ணீர் பாட்டிலுடன் வலம் வருவார்கள். கடைகளிலும் தண்ணீர் பாட்டில் விற்பனை பலமடங்கு அதிகரிக்கும்.
ஆனால், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை, அதிக ஆபத்தான உணவு பட்டியலில் சேர்த்திருக்கிறது.

கடந்தாண்டு டிசம்பரில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ''வெவ்வேறு நிறுவனங்களின் குடிநீர் பாட்டில்களின் மாதிரிகளை ஆய்வு செய்ததில், கண்ணுக்கு தெரியாத 2.40 லட்சம், 'மைக்ரோ' பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இவை, செரிமானப் பாதை அல்லது நுரையீரலின் திசுக்கள் வழியாக சென்று, ரத்த ஓட்டத்தில் நுழைந்து, பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த பிளாஸ்டிக் துகள், மனித நுரையீரல், ரத்தம், மலம் உள்ளிட்டவற்றில் கண்டறியப்பட்டுள்ளது. தீங்கு விளைவிக்கக்கூடிய இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க, பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பதிலாக கண்ணாடி பாட்டில், துருப்பிடிக்காத, 'ஸ்டீல்' பாட்டில், மூங்கில் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும்" என உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரி, ``பிளாஸ்டிக் துகள்களில், 90 சதவிகிதம் மிகவும் சிறிதான 'நானோ பிளாஸ்டிக்'. எனவேதான், பிளாஸ்டிக் பாட்டில் குடிநீர், ஆபத்தான உணவு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில், 100 சதவிகிதம் பிளாஸ்டிக் இல்லாத குடிநீர் பாட்டில் பயன்பாட்டைக் கொண்டு வர முடியாது. ஆனால், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை தவிர்க்கும்படி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய, ரூ.10, 20 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்களில், மறுபடியும் தண்ணீர் பிடித்து அருந்த வேண்டாம். அதுதான், அதிகளவில் உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் செல்வதற்கான காரணியாக உள்ளது." என எச்சரிக்கிறார்கள்.
அதெல்லாம் சரி... முதன்முதலாக குடிநீர் விற்பனையை தொடங்கியது யார்? இந்த பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு எப்படி வந்தது? இதை மக்களிடம் பிரபலப்படுத்தியது யார்? போன்ற சந்தேகங்களுக்கு பதில் தேவைபட்டது...
மக்கள் பழங்காலத்திலிருந்து தண்ணீரை சேமிக்கவும், கொண்டு செல்லவும் பல்வேறு பொருள்களை பயன்படுத்தியிருக்கின்றனர்.
களிமண் குடுவைகள் – மண் பானைகள் மற்றும் மட்கலன்கள் நீரை குளிர்விக்க பயன்படுத்தப்பட்டது.
தேங்காய் ஓடு குடுவை – பழமையான சமூகங்கள் தேங்காய் ஓட்டை நீர் சேமிக்க பயன்படுத்தின.
மூங்கில் குடுவை - மூங்கில் பகுதியைத் தோண்டி, நீரை சேமிக்கவும் எடுத்துச் செல்லவும் பயன்படுத்தினர்
தோல் பைகள் – கால்நடைகளை வளர்த்த சமூகங்கள் மாட்டுத்தோலில் செய்த பைகளை நீர் சேமிக்கப் பயன்படுத்தின.

தாமிரக் குடம் – இந்தியாவில், தாமிரக் குடங்களில் நீரை சேமித்து, எடுத்துச் செல்லும் பழக்கம் இருந்தது.
மரக்குடம் (Wooden Container) – சில பழங்கால சமூகங்களில் மரத்தால் செய்யப்பட்ட நீர் குடுவைகள் பயன்படுத்தப்பட்டன.
செம்பு (Brass Pot) – நீரை சுத்தமாக வைத்திருக்கவும், ஊட்டச்சத்துகளை பாதுகாக்கவும் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இங்கிலாந்தில் 'ஹோலி வெல்' என்ற புனித கிணற்று நீர் நோய்களை தீர்க்கும் மருத்துவக் குணமுள்ளது என நம்பப்பட்டது. அதை 1621-ம் ஆண்டுகளில் கண்ணாடி பாட்டில்களில் அடைத்து, ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்தார்கள். இந்தப் புனித நீர் விற்பனை அமோக வரவேற்பைப் பெற்றது. அந்தத் தண்ணீர் பாட்டில்கள் குதிரைகளில் அண்டை நாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு விற்கப்பட்டது.

1767-ம் ஆண்டில், அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்தில் 'ஜாக்சன்ஸ் ஸ்பா' எனும் ஒரு விருந்தினர் இல்லம் இருந்தது. அதன் உரிமையாளர், மரணப் படுக்கையில் இருந்தார். அவருக்கு உள்ளூர் நீரூற்றிலிருந்து தண்ணீர் குடிக்கக் கொடுக்கப்பட்டது. அதன்மூலம் அவர் குணமடைந்ததாக உணர்ந்தார். அதன் சிகிச்சை பண்புகளைக் கண்டறிந்த அவர், அமெரிக்காவில் அந்த நீரை விற்பனை செய்யத் தொடங்கினார். மக்களின் பெரும் வரவேற்பால் 'போலந்து ஸ்பிரிங்' என்ற பிராண்டின் கீழ் தண்ணீரை விற்கத் தொடங்கியது அவரின் குடும்பம். நோய் நிவாரணியாக நம்பப்பட்ட அந்த தண்ணீர், மருந்தகங்களிலிருந்து சில்லரை விற்பனை நிலையங்களுக்கு வந்தது. அங்கிருந்து மளிகைப் பொருள்களுடன் சேர்த்து விற்கப்பட்டது.
1783-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், 'ஜோஹன் ஜேக்கப் ஸ்வெப்பே' என்பவர் தண்ணீரில் கார்பனேட் செய்யும் வழிமுறை, அதாவது ஒரு திரவத்தில் கார்பன் டைஆக்சைடு (CO₂) வாயுவை கலக்கும் முறையைக் கண்டுபிடித்தார். பாட்டில் தண்ணீர் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதற்கு இதுவும் முக்கியக் காரணம். இந்தக் கண்டுபிடிப்புதான் தண்ணீர் மினரல் வாட்டருடன் பொருந்தக்கூடிய ஒரு தரத்தை அளித்தது.
1809-ம் ஆண்டில், ஜோசப் ஹாக்கின்ஸ் அமெரிக்காவில் கார்பனேற்றப்பட்ட தண்ணீருக்கான காப்புரிமையைப் பெற்றார். அதன்மூலம் அமெரிக்க சந்தையில் கார்பனேற்றப்பட்ட தண்ணீர் பொது மக்களிடம் கவர்ச்சியாக காண்பிக்கப்பட்டது. அதேநேரம், பாட்டில் உருவாக்கும் கண்ணாடி விலையைக் குறைத்தும், பாட்டில் உற்பத்தி தொழில்நுட்பங்களை மேம்படுத்தியும் அமெரிக்காவில் தண்ணீர் பாட்டில் விற்பனைத் தொழில் மெல்லத் தொடங்கி வளர்ந்தது.

அதே காலகட்டத்தில், வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் டைபாய்டு, காலரா போன்ற நோய்கள் பரவத் தொடங்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டது. அதனால், நீரூற்றிலிருந்து பாட்டில் தண்ணீர் கிடைப்பதால், மருத்துவ குணம் நிறைந்தது என்றும், பாதுகாப்பானதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமெரிக்கர்கள் நம்பத் தொடங்கினர். 1.75 டாலர் என்ற விலையில், 1856-ம் ஆண்டில் மட்டும், நியூயார்க்கில் உள்ள சரடோகா ஸ்பிரிங்ஸில் 7 மில்லியனுக்கும் அதிகமான தண்ணீர் பாட்டில்கள் விற்கப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கிடைக்கிறது. அப்போதுதான், தண்ணீர் பாட்டில் ஓர் அங்கீகாரமாகவும், ஆடம்பரத்தின் சின்னமாகவும், பெருமையாகவும் கருதப்பட்டது.
1908-ல் டைபாய்டு தொற்றுநோய்க்கு குளோரினேஷன் போன்ற நீர் கிருமி நீக்கம் செய்யும் முறைகள் சிகிச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 'குளோரின் கலந்த பாட்டில் நீரே சுத்தமானது' என தண்ணீர் பாட்டில் விற்பனை நிறுவனங்கள் மருத்துவர்களை வைத்து விளம்பரம் செய்யத் தொடங்கினர். குளோரினை பாட்டில் தண்ணீரில் கலந்து விற்பனையையும் அதிகப்படுத்தினர்.
ஆனால், அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் ஏற்கெனவே குழாய் நீரில் குளோரினேஷன் செய்யப்பட்டு வழங்கும் நடைமுறைகள் வழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
1947-ல் பிளாஸ்டிக் பாட்டில்கள் முதன்முதலில் வணிக ரீதியாக பயன்படுத்தப்பட்டன. ஆனால், ஒப்பீட்டளவில் விலை அதிகமானதாகவும், குறிப்பிட்ட குழுவால் மட்டுமே அதை வாங்கிப் பயன்படுத்த முடியும் என்ற சூழல் இருந்தது. 1950 களின் முற்பகுதியில் அதிக அடர்த்தி கொண்ட பாலிஎதிலீன் பாட்டில்கள் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்தது. 1960-கள் வரை தண்ணீர் பாட்டில் தொழில் சிறியதாகவே, பணக்காரர்களுக்கானதாகவே இருந்தது.
அமெரிக்காவில் அமைந்துள்ள DuPont என்ற பல்துறை வேதியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியாளரான நதானியேல் வைத், தண்ணீர் பாட்டில்களுக்குப் பின்னால் உள்ள தொழில்நுட்பத்தை கண்டறிந்தவர் எனக் கூறப்படுகிறது. அதாவது, கார்பனேற்றப்பட்ட திரவங்களின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய முதல் பிளாஸ்டிக் பாட்டிலைக் கண்டுபிடித்தவராக கருதப்படுகிறார். பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) பாட்டில்களுக்கு காப்புரிமை பெற்றவரும் இவர்தான். தண்ணீர் பாட்டிலைக் கண்டுபிடித்தவர் யார்? என்ற கேள்வி எழும்போது, வரலாற்றாசிரியர்கள் நதானியேல் வைத்-தையே குறிப்பிடுகிறார்கள்.

1970-களில் தீவிரமான சந்தைப்படுத்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட தண்ணீரை பிரபலப்படுத்துவதற்காக, பெரியர் (Perrier) என்ற பிரபலமான கனிம நீர் (mineral water) பிராண்ட் தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த 5 மில்லியன் அமெரிக்க டாலர் செலவழித்தது. இந்த பிரசாரம்தான், 'பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர் சுத்தமானது, பாதுகாப்பானது' என்ற பிம்பம் உலக நாடுகளுக்கு மத்தியில் கொண்டுசெல்ல பெரும் காரணமானது. இந்த விளம்பரம் அந்தக் காலத்தில் பெருமளவில் பேசப்பட்டது.
1973-ல், 'பெட் பாட்டில்' எனப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களின் அறிமுகம், தண்ணீர் சந்தையை வேறு இடத்துக்கு நகர்த்தியது. கார்பனேற்றப்பட்ட பானங்களை வைத்திருக்கக்கூடிய முதல் பிளாஸ்டிக் பாட்டில்களின் காப்புரிமையும் இந்த 'பெட்' பாட்டில் பெற்றது. இந்த வகை பிளாஸ்டிக் பாட்டில் தயாரிப்புச் செலவு மிகக் குறைவு, அதேசமயம் லாபம் கடல் அளவு என்பதால், அப்போதுமுதல் தண்ணீர் விற்பனை மாபெரும் காசு கொட்டும் வர்த்தகமானது. இதனால் பாட்டில் தண்ணீர் பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

2000-ம் ஆண்டில், குழாய் நீர் VS தண்ணீர் பாட்டில் என்ற கருத்துவாக்கம் விவாதமாக்கப்பட்டது. குழாய் நீரிலிருந்து மாசு, நோய் தொற்று போன்ற மக்களின் யதார்த்தமான அச்சத்தை தண்ணீர் பாட்டில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டன. இதை மிகச் சரியாகப் பயன்படுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கது, பிரிட்டா ஃபில்டர்ஸ். குடிநீரை வடிகட்டும் (Water Filtration) பிரபல ஜெர்மன் நிறுவனமான இது, கழிவறை நீரும், குழாய் நீரும் ஒரே இடத்திலிருந்து வருகிறது. அதைச் சுத்தம் செய்துதான் அருந்தவேண்டுமென வலிறுத்தியது. அதன்மூலம் தன் லாபத்தை பன்மடங்கு பெருக்கியது.
2011-ம் ஆண்டில் அமெரிக்க அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (Environmental Protection Agency) பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து கவலையை வெளிப்படுத்தியது. மேலும், பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்புக்கென விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அதன் அடிப்படையில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலின் எடையை 47.7 கிராமிலிருந்து, 9.89 கிராமாகக் குறைத்தது.
உலகளவில் இன்று பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும், அதன் சுற்றுச் சூழல் மாசுபாடு குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால், பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு பதிலாக பிற உலோக பாட்டில்களை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரமான கான்கார்ட்த்தில் (Concord) , 2013-ம் ஆண்டு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை நடவடிக்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டும் வருகிறது. ஆனால், சிறிய நகரத்தில் இதை சாத்தியப்படுத்த முடிகிறது என்றாலும், இந்தியா போன்ற நாட்டில் அதற்கான கூடுதல் மெனக்கெடல்கள் தேவைப்படுகிறது.
ஒருவேளை இந்தியாவில் பிளாஸ்டிக் தடை என்ற உத்தரவு வந்துவிட்டால் நம்மிடம் பிளாஸ்டிக்குக்கு மாற்று என்ன என்றக் கேள்வி எழுகிறது. இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜனிடம் கேட்டோம். அவர், ``உலகின் பல நாடுகளில் 'பிளாஸ்டிக் தடை வேண்டும்' என போராட்டங்களைத் தொடங்கிவிட்டார்கள். இந்தியாவில்தான் அது போன்ற கோரிக்கைகள் மட்டுமே முன்வைக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் வருவதற்கு முன்பு, நாம் எப்படி தண்ணீரைக் குடித்தோம்.
பொது இடங்களில் குடிப்பதற்கு ஏற்ற குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஹோட்டல்களில் கூட தண்ணீர் இலவசமாகவே வழங்கப்பட்டது. தனியார் நிறுவனங்கள், மால், தியேட்டர் போன்றவைகளிலும் குடிப்பதற்கான தண்ணீர் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். நம் அப்பா காலத்தில் இறைச்சியை இலையில் சுற்றி, சணலால் கட்டிக் கொடுப்பார்கள். பால் வாங்குவதற்கு பாட்டில்கள், தூக்குகளை எடுத்துச் செல்வோம். அப்படித்தான் இயற்கைக்கு பாதகமில்லாமல் வாழ்ந்தோம்.
இப்போதுதான் நாம் அதிகமான குப்பைகளை சேர்க்கத் தொடங்கியிருக்கிறோம். உதாரணத்துக்கு, பல நாடுகளில் டூத் பேஸ்ட்டின் டியூப்கள் மட்டும்தான் கடைகளில் விற்கப்படும். அந்த டியூப்க்கென வரும் அட்டைகள் வருவதே இல்லை. ஆனால் நாம்தான் பொருளுக்கு மேல் ஒரு காகிதம், அட்டை, பாலிதீன் என குப்பைகளை சேகரித்து மாசுகளை உருவாக்கி வருகிறோம்" என்றார்.
'இந்தியாவில் பிளாஸ்டிக் தடை' என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும். கமெண்ட் பகுதியில் தெரிவிக்கலாமே!