மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
கரூர்: காய்கறித் தோட்டம்.. மீன்குட்டை.. மரங்களுக்குப் பெயர்ப் பலகை.. அரசுப் பள்ளியின் புதிய முயற்சி
தமிழக அளவில் செயல்பட்டு வரும் பசுமைப் பள்ளிகளில் மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படும் பள்ளியைத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்குச் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சான்றிதழ்களை வழங்கினார்.

அந்த வகையில், பசுமைப் பள்ளி அமைப்பை மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்படுத்தியதாக, கரூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதியிடம் பேசினோம்.
"கடந்த 1955ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தற்போது 30 ஆசிரியர்களைக் கொண்டும், 467 மாணவர்களுடனும் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில், தமிழக அரசுப் பள்ளிக் கல்வித்துறை துவங்கிய பசுமைப் பள்ளிகள் அமைப்பில் கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளிகளில் எங்கள் பள்ளியும் இணைந்து செயல்படத் துவங்கியது. இதில், இங்கு தாவரவியல் முதுகலை பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஆரோக்கிய ஜெரால்டு மற்றும் பள்ளி மாணவர்கள் சேர்ந்து டைனோசர் உருவத்தை உருவாக்கினர்.

பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் அனைத்து காலங்களிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், இந்த டைனோசர் உருவத்தை உருவாக்கி பள்ளியின் வளாகத்தில் வைத்துள்ளனர். இது தவிர, பள்ளி வளாகத்தைச் சுற்றி உள்ள அனைத்து மரங்களின் வகைகளை அறிந்து கொள்ளும் வகையில் மரங்களின் பெயர்களைப் பெயர்ப் பலகையாக வைத்து மாணவர்களே அவற்றைப் பராமரித்து வருகின்றனர்.
இது தவிர, பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் இருந்த இடத்தில் மூலிகை தோட்டத்தை மாணவர்களே உருவாக்கியுள்ளனர். அதேபோல், இன்னும் ஒரு இடத்தில் காய்கறி தோட்டமும் அமைத்துள்ளனர். இதைத்தவிர, குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது, சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வது, மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது உள்ளிட்ட செயல்பாடுகளைத் தோட்டக்கலைத்துறை சார்பில் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன.
'ஈர நிலப் பாதுகாப்பு' என்ற அமைப்பு மூலம் உலகம் முழுவதும் ஈர நிலத்தின் அவசியம் குறித்தும், இதனால் செடி, கொடி உயிரினங்கள் எவ்வாறு வாழ்கின்றன என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. நம் நாட்டுக்கு ஏற்ற சூழ்நிலையைக் கொண்டு மீன் வளர்ப்பு செய்வது குறித்து சிறிய குளம் ஒன்றை உருவாக்கி மீன் வளர்ப்பை மாணவர்களே செய்து வருகின்றனர். அதோடு, பொதுமக்களுக்கு இயற்கையைக் காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பேரணிகளையும் நடத்தி வருகின்றோம்.

பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், மாவட்டச் சுற்றுச்சூழல் மற்றும் தோட்டக்கலை வேளாண்மை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்தவர்களின் கூட்டு முயற்சியை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட அளவில் 'சிறந்த பசுமைப் பள்ளி' என்ற சான்றிதழை புகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குத் தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த கௌரவம் இன்னும் எங்களைத் திறம்படச் செயல்பட வைக்கும்.
தொடர்ந்து, மாணவர்களுக்கு வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமின்றி இதுபோல் இயற்கை சார்ந்த கல்வியையும், வாழ்வியல் கல்வியையும் தொடர்ந்து வழங்குவோம்" என்றார்.
அதனைத்தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் சிலரிடம் பேசினோம்.
"மனிதன் வாழ்வதற்குச் சுற்றுச்சூழல், விவசாயம், விலங்குகள் பாதுகாப்பு எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து மாணவர்களே அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துச் செய்து வருகின்றோம். இயற்கை உயிர் சங்கிலியைக் காத்தால்தான், மனிதர்களாகிய நாம் தொடர்ந்து இந்த பூமியில் உயிர்வாழ முடியும். அதை அடுத்த தலைமுறையினரான எங்களுக்கு ஜெரால்டுக்கு சாரும், தலைமை ஆசிரியை உள்ளிட்ட ஆசிரியர்களும் வழங்கி வருவதை நாங்கள் ஆர்வமுடன் கற்றுக்கொள்கிறோம். தொடர்ந்து, படித்து முடித்து வேலைக்குப் போன பிறகும் இயற்கைக்காகத் தொடர்ந்து இயங்குவோம்.

இப்போது, பள்ளி வளாகத்தில் தோட்டக்கலையில் நாங்கள் உருவாக்கியுள்ள விதை கன்றுகள் மூலம் எங்கள் பள்ளிக்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்கும், வேறு பள்ளிகளுக்கும் மரக்கன்றுகளாக வழங்கி வருகின்றோம்" என்றார்கள்.
இதுகுறித்து, பள்ளியின் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆரோக்கிய ஜெரால்டு,
"பள்ளி மாணவர்கள் தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக அரசு பசுமைப் பள்ளி என்ற அமைப்பைச் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் மண்புழு உரம் தயாரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு, இயற்கை விவசாயம், உர மேலாண்மை சார்ந்த விஷயங்கள் என்று எங்கள் மாணவர்களின் செயல்பாடுகள் பல்வேறு விஷயங்களில் ஊக்குவிக்கப்படுகின்றன.
கரூர் மாவட்ட அளவில் மூன்று பசுமைப் பள்ளிகள் சிறப்பாகச் செயல்படுவதாகத் தேர்வு செய்யப்பட்டன. இறுதியில், இதில் மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்பட்டதாக எங்கள் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. பசுமைப் பள்ளி என்ற அமைப்பை அரசு உருவாக்கி உள்ளதால் அதில் மாணவர்கள் ஆர்வமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
பசுமைப் பள்ளி திட்டத்தின் முக்கியமான நோக்கமே மாணவர்கள் மாணவர்களைப் பசுமையை நோக்கி விழிப்புணர்வு அடையச் செய்வது. ஏனென்றால், உலக வெப்பமயமாதல் பசுமையாக விளைவு, ஓசோன் மண்டல பாதிப்பு போன்ற பலவிதமான பிரச்னைகள் இருக்கின்றன. அதற்கெல்லாம் ஒரு தீர்வு வந்து யார் கொடுக்க முடியும் என்றால், அது இன்றைய மாணவர்கள் மூலமாக ஒரு தீர்வு கொடுக்க முடியும்.

ஏனென்றால் மாணவர்களுடைய மனதில் இந்த பசுமையை விதைத்தால்தான் அவர்கள் எதிர்காலத்தில் பூமியைக் காப்பாற்றுவார்கள் என்ற ஒரு அருமையான ஒரு திட்டத்தின் அடிப்படையில், 55 மாணவர்களைப் பசுமைப்படையில் சேர்த்து, அனைத்து விதமான உதவிகளைப் பெற்று, பள்ளிக்கூடத்தில் மிகச் சிறப்பாகப் பல விதமான பசுமை பணிகளை மேற்கொண்டு வந்திருக்கிறோம். காய்கறி தோட்டம் உருவாக்கியுள்ளோம். அதேபோல், மியாவாக்கி முறையில் ஒரு மாடல் தோட்டம் உருவாக்கிப் பல மரக்கன்றுகள் ஒரே இடத்தில் அதிகப்படியாக உற்பத்தி செய்வது குறித்துப் பயிற்றுவிக்கப்படுகிறது.

தொழில் முனைவோராக எதிர்காலத்தில் திகழ்வதற்கும் மாணவர்களுக்கு இவ்வகையான செயல்பாடுகள் உதவியாக இருக்கும். பூமியில் அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் 11 அடியில் டைனோசர் பள்ளியின் முன்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது.


அழிந்து வரும் உயிரினங்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாணவர்கள் டைனோசரை உருவாக்கியுள்ளனர். தொடர்ந்து, இந்த பள்ளியைச் சுற்றி இன்னும் இயற்கையைக் கட்டமைப்பதோடு, மாணவர்களைத் தொடர்ந்து இயற்கை காதலர்களாக மாற்றுவோம்" என்றார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks