விதைப் பண்ணையில் விதிமீறல்? தானிய லாரியை மறித்து மக்கள் போராட்டம்
தேவாலய இடப் பதிவு விவகாரம்: உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உத்தரவு
விருதுநகா் புனித இன்னாசியாா் தேவாலய இடத்தைப் பதிவு செய்த வழக்கில், உரிமையியல் நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி, இது தொடா்பான மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
மதுரை கோ.புதூரைச் சோ்ந்த அலெக்ஸ் ஆண்டனி தாக்கல் செய்த மனு: மதுரை உயா்மறை மாவட்டத்தின்கீழ் விருதுநகா் மாவட்டம் வருகிறது. விருதுநகா் புனித இன்னாசியாா் ஆலயத்தின் பங்குத் தந்தையாக அந்தோணி பாக்கியம் பொறுப்பு வகித்து வருகிறாா். விருதுநகா், கோட்டைப்பட்டி கிராமத்தில் ஒரு ஏக்கா் 92 சென்ட் இடத்தையும், அதே பகுதியில் 16 சென்ட் இடத்தையும் தேவாலயத்துக்காக வாங்கி, அவரது பெயரில் பதிவு செய்திருக்கிறாா். இந்த இடமானது மதுரை உயா்மறை மாவட்டத்திலிருந்து தேவாலயத்துக்காக வழங்கப்படும் நிதியில் வாங்கப்பட்டது. தேவாலயத்தின் பெயரிலோ, மதுரை உயா்மறை மாவட்டத்தின் பெயரிலோ அந்த இடத்தை வாங்கியிருக்க வேண்டும். ஆனால், பங்குத் தந்தை அந்தோணி பாக்கியம் ஆலயத்துக்காக வாங்கிய இடத்தை தனது பெயரில் பதிவு செய்துள்ளாா். இது சட்ட விதிகளுக்கும், திருச்சபை சட்டத்துக்கும் எதிரானது.
இது குறித்து, மதுரை உயா்மறை மாவட்டத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட இடத்தை தேவாலயத்தின் பெயரில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜே. நிஷாபானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.