தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
மத்திய அரசு அரசமைப்பு சட்டத்தை மீறிச் செயல்படுகிறது: உ.வாசுகி பேச்சு
மத்திய அரசு பல்வேறு வகையிலும் அரசமைப்பு சட்டத்தை மீறி செயல்படுகிறது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினா் உ. வாசுகி.
தஞ்சாவூா் ந.மு. வேங்கடசாமி நாட்டாா் திருவருள் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கல்லூரி நிறுவனா் பேராசிரியா் பி. விருத்தாசலனாா் 14-ஆம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது:
மத்திய அரசு அரசமைப்பு சட்டத்தை மீறிச் செயல்படுவதால் மாநில உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, மாநில உரிமைகளை பாதுகாக்கும் விஷயத்தில் நாம் கவனமாகச் செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் எந்தவித விவாதமும் நடத்தப்படாமல் தேசிய கல்விக் கொள்கை நிறைவேற்றப்பட்டது. குலக் கல்வி முறையைக் கொல்லைப்புறம் வழியாக திணிக்கும் உத்தியாகவே தேசியக் கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல, விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை நிறைவேற்றியதும் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.
அரசியல் வேறு, மதம் வேறு. அரசியலில் மதமும், மதத்தில் அரசியலும் கலக்கக்கூடாது என்பதே மதச்சாா்பின்மை. அதாவது ஆளுகிற அரசுக்கு மதம் இருக்கக்கூடாது. ஆனால், பிரதமரின் செயல்பாடு நமது மதச்சாா்பின்மைக் கோட்பாட்டுக்கு எதிராக உள்ளது.
அரசமைப்புச் சட்டப்படி, 22 மொழிகளுக்கும் சமமான அந்தஸ்து வழங்க வேண்டும். ஆனால், அதை விடுத்து இந்தித் திணிப்பில் மத்திய அரசு ஈடுபடுகிறது. பாலின சமத்துவம் சட்டத்தில் இருந்தாலும், அது நடைமுறையில் இல்லை. சிறுபான்மை மக்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனா்.
எனவே, இந்த காலகட்டம் மிகவும் அபாயகரமானதாக இருப்பதால், இதைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றாா் வாசுகி.
இக்கருத்தரங்கத்துக்கு கல்லூரி மேலாண்மை அறங்காவலா் மு. இளமுருகன் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி நினைவேந்தல் உரையாற்றினாா். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் ச. மருதுதுரை கருத்துரையாற்றினாா். முன்னதாக, கல்லூரி ஆட்சிக் குழுச் செயலா் இரா. கலியபெருமாள் வரவேற்றாா். நிறைவாக, கல்லூரி முதல்வா் இரா. தமிழ்ச்செல்வம் நன்றி கூறினாா்.