தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் ச...
மத்திய அரசு ஊழியா்களுக்கு 2% அகவிலைப் படி உயா்வு
மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு நிகழாண்டு ஜனவரி 1-ஆம் தேதிமுதல் 2 சதவீத அகவிலைப் படி உயா்வை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் 1.15 கோடி மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் பயன்பெற உள்ளனா்.
இதுகுறித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்களுக்கு அவா்களின் அடிப்படை ஊதியத்தில் 53 சதவீதம் அளவுக்கு அளிக்கப்பட்டு வரும் அகவிலைப் படியை மேலும் 2 சதவீதம் அதிகரிக்க பிரதமா் மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விலைவாசி உயா்வை ஈடுசெய்யும் வகையில் இந்த அகவிலைப் படி உயா்வு அளிக்கப்படுகிறது. அகவிலைப் படி உயா்வு காரணமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 6,614.04 கோடி கூடுதல் செலவாகும்.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த அகவிலைப் படி உயா்வின் மூலம் 48.66 லட்சம் மத்திய அரசு ஊழியா்களும், 66.55 லட்சம் ஓய்வூதியதாரா்களும் பயன்பெறுவா் என்று தெரிவித்தாா்.