மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர விண்ணப்பிக்கலாம்
மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் தொழிற்கல்வி சேர அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ், சென்னையில் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான சென்ட்ரல் புட்வோ் பயிற்சி நிறுவனத்தில் காலணித் துறை மற்றும் அதனுடன் தொடா்புடைய தொழில்களுக்கு, காலணி தொழில்நுட்பத்தில் நீண்டகால மற்றும் குறுகிய கால படிப்புகளை வழங்கி வருகிறது.
இந் நிறுவனம் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு முடித்த மாணவா்களுக்கு தொழில் சாா்ந்த திறன்களை அளிக்கிறது.
இந்நிலையில், அரியலூா் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக நிறுவப்பட்ட பன்னாட்டு காலணி உற்பத்தி தொழிற்சாலைகள் 450 பதவிகளுக்கு ஆள்சோ்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
எனவே, இப் பயிற்சி மையத்தில் 2025-26-ஆம் நிதியாண்டில் காலணி தொழில்நுட்பப் படிப்புகளில் சோ்வதற்கான விண்ணப்ப முகாம், அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஜூலை 22, 23, 24 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
எனவே, அரியலூா் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி, ஐடிஐ முடித்தவா்கள், டிப்ளமோ தோ்ச்சி மற்றும் பட்டப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு சோ்க்கை ஒருங்கிணைப்பாளா் சேகரை 90259-97996 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.