மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்!
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் 18 நாள்கள் நடைபெறும் பங்குனித் திருவிழாவையொட்டி த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 18 நாள் திருவிழாவும். அதனை தொடர்ந்து, 12 நாள்கள் விடையாற்றி விழாவும் நடைபெறுவதுடன் பெருமாள் எழுந்தருளும் வெளிப்பிரகார தேரோட்டம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவங்களுடன் பங்குனித் திருவிழா நிறைவுபெறும்.
நிகழாண்டிற்கான தொடங்க விழா, இன்று காலை (செவ்வாய்க்கிழமை) 11.30 மணிக்கு காலை த்வஜாரோஹனம் என்னும் கொடியேற்ற நிகழ்ச்சியில் பெருமாள் சன்னதிக்கு எதிரே உள்ள பெருமாள் மண்டபத்தில் பெரிய கொடிமரத்தில், கருடன் உருவம் பொறித்த கொடியினை வேதமந்திரங்கள் கூறியபடி பட்டாட்ச்சாரியார்கள் ஏற்றிவைத்தனர். பின்னர், சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திராளன பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இத்திருவிழாவினையொட்டி, ஒவ்வொரு நாளும் உத்ஸவர் ராஜகோபாலசுவாமி, கண்ணன், கிருஷ்ணர், ராஜ பட்டாபிராமர், வேணு கோபாலர், மாயவநாதன், வைகுண்டநாதன் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வெளிப் பிராகாரங்களின் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்போது சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வுகளாக, மார்ச்.23 கண்ட பேரண்ட பக்ஷி, மார்ச் 27ல் தங்க சூர்யபிரபை, ஏப். 1 கோரதம், ஏப்.2. காலை வெண்ணெய்த்தாழி, இரவு வெட்டுங்குதிரை, 3ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து,12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா, மார்ச் 4ஆம் தேதி தொடங்கி, 15ஆம் தேதி கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்ஸவத்துடன் நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுத் தலைவர் சி. இளவரசன், அறங்காவலர்கள் கே.கே.பி. மனோகரன், வெ. லதா, துரை நடராஜன், நிர்வாக அலுவலர் எஸ்.மாதவன், மண்டகப்படிதாரர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.