Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
நடிப்பை விட்டுட்டு சொந்த ஊருக்கே போயிட்டேனா? `சரவணன் மீனாட்சி' இர்ஃபான்|இப்ப என்ன பண்றாங்க பகுதி -1
ஒரு காலத்தில் ஸ்க்ரீனில் பிஸியாக இருந்து ரசிகர்களாலும் கவனிக்கப்பட்டவங்க இவங்க. விரும்பி பிரேக் எடுத்தாங்களா, சூழ்நிலையா தெரியாது.. இப்போது மேக்-அப், ஷூட்டிங் என எந்தப் பரபரப்புமின்றி இருக்கிறார்கள். 'இப்ப என்ன பண்றாங்க?' என இவர்களைத் தேடிப் பிடித்தோம். விகடன் தளத்தில் இனி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை நீங்கள் இவர்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
சரவணன் - மீனாட்சி
விஜய் டிவியில் மிர்ச்சி செந்தில் - ஶ்ரீஜா நடிப்பில் ஒளிபரப்பான தொடர் 'சரவணன் மீனாட்சி'.
ரொம்பவே ஹிட் ஆனதால் இரண்டாவது சீசனாக தொடரை நீட்டிக்க விரும்பியது சேனல். ஆனால் செந்தில் -ஶ்ரீஜா ஜோடி அடுத்த பார்ட்டில் நடிக்க மறுத்து விட்டதால், அவர்களைப் போலவே நல்லவொரு ஜோடியைத் தேடினார்கள்.
அடுத்த சில தினங்களில் சீரியலின் புரொமோ வெளியானது. சாக்லேட் பாய் லுக்கில் ஹீரோவாக அறிமுகமான அந்தப் பையனை, 'எங்கேயோ பார்த்த முகம் போல இருக்கே' என சீரியல் ரசிகர்கள் பலரும் பின் மண்டையத் தட்டிக் கடைசியில் கண்டே பிடித்து விட்டார்கள், 'அட, 'கனா' இர்ஃபான் இல்ல இது!

பாதியில் வெளியேறிய இர்ஃபான்
யெஸ், விஜய் டிவியில் 'கனா காணும் காலங்கள்' தொடரில் வந்த இர்ஃபான், பிறகு 'சரவணன் மீனாட்சி சீசன் 2' மூலம் ரொம்பவே பிரபலமானார். இந்த சீரியலில் ரச்சிதாவுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி ரொம்பவே ஒர்க் அவுட் ஆனது எனச் சொல்லலாம்.
இந்த சீரியல் மூலம் இவருக்கு கிடைத்த ரசிகர்கள் அதிகம். சரி, அந்த சீரியலுக்குப் பிறகு எங்கு போனார், என்ன ஆனார்? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் பார்க்கலாமா?
'சரவணன் மீனாட்சி 2' முடியும் வரைக் கூடக் காத்திருக்காம பாதியிலேயே வெளியேறினார். இத்தனைக்கும் சீரியல் நல்லபடியா போயிட்டிருந்தது. இவர் சீரியலை விட்டு வெளியேறிய அடுத்த சில வாரங்கள் தொடரின் ரேட்டிங்கே தடுமாறியது எனச் சொல்லலாம்' என்கிறார்கள் இர்ஃபானின் நண்பர்கள்.
சினிமா ஆர்வம்
இர்ஃபான் அன்று சீரியலை விட்டு விலகியதற்கு காரணம் சினிமா மீதான ஆர்வம்.
ஆனால் இவர் முதலில் சினிமாவில் நடிகனாக ஆசைப்படவில்லை என்றால் நம்புவீர்களா? நிஜம்தான். இவருக்கு இருந்தது இயக்குநர் கனவுதான். கனவை நனவாக்க பெங்களூரு சென்று டைரக்ஷன் கோர்ஸ் கூட படித்து வைத்திருந்தார்.
'டைரக்டர ஆவேன்னு நம்பினேன். நிதின் சத்யாவை ஹீரோவா வச்சு பட வேலைகள்லாம் கூடத் தொடங்குச்சு. ஆனா ஏதோவொரு காரணத்தால் அது நடக்கலை. பிறகு எப்படியோ சீரியல் பக்கம் வந்துட்டேன். அது மக்கள்கிட்ட கொஞ்சம் முகத்தைக் காட்டத் தொடங்கியதும், மறுபடியும் அதே சினிமா அழைத்தது.

இந்த முறை நடிகனா கூப்பிட்டாங்க. 'சினிமா ஹீரோ முகம் பாஸ் இது. ஏன் டிவியிலயே இருந்துகிட்டு'ன்னு சொல்லிச் சொல்லியே ஆசையைத் தூண்டி விட்டாங்க. 'உசுப்பேத்தி விட்டே ரணகளப்படுத்தறாங்க'னு வடிவேலு சார் ஒரு படத்துல சொல்வார் பாருங்க, அதேதான் நடந்துச்சு.
'சரி, சினிமாவுக்காக குடும்ப பிஸினசையெல்லாம் விட்டுவிட்டு வந்தோமே, இதுவாச்சும் அமையுதா பார்க்கலாம்'னு நடிக்கக் கிளம்பினேன்.
ஆனா நினைப்பதெல்லாம் எத்தனை பேருக்கு அப்படியே நடக்குது?
'சுண்டாட்டம்', 'பொங்கி எழு மனோகரா' உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவா நடிச்சேன். ஆனாலும் நான் எதிர்பார்த்தது போல் இல்லை சினிமா' என முன்பு ஒரு பேட்டியில் நம்மிடம் பேசியிருந்தார்.
வில்லன் அவதாரம்
இயக்குனர் கனவும் நிறைவேறவில்லை. ஹீரோவாகவும் ஆக முடியவில்லை.. இந்தச் சூழலில், சேரன் நடித்த 'ராஜாவுக்கு செக்' படத்தில் வில்லனாக நடிக்கக் கூப்பிட்டார்கள்.
'பரவாயில்லை' என ரூட்டை மாற்றிப் பார்த்தார். ஆனால் அதன் பிறகுமேகூட பெரிதாக வாய்ப்புகள் அமையாத நிலையில், குடும்ப பிசினஸ் கவனிக்க சொந்த ஊரான திண்டுக்கல் போய் விட்டதாக ஒரு தகவல் உலா வந்தது.
சீரியலை விட்ட பிறகு சினிமாவும் சரியாக அமையாத நாட்களில் இவர் பட்ட கஷ்டங்கள் நிறைய, வருமானத்துக்காக ஓட்டல் ஒன்றில் சர்வராக இருந்ததெல்லாம் நடந்தது.
'ஃப்ரண்டு ஹோட்டல் அது. நம்ம செலவுக்காவது ஆகுமேனுதான் அந்த வேலையைச் செய்தேன். முகம் தெரியாதபடி ஒரு மாஸ்க்கை போட்டுகிட்டு வேலை பார்ப்பேன். ஆனா ஒருநாள் கஸ்டமர் ஒருத்தர் கூட சின்னப் பிரச்னை உண்டாகி, கடைசியில 'தம்பி நீங்க இர்ஃபானா'னு அந்தக் கஸ்டமர் கண்டு பிடிச்சிட, அன்னைக்கோட அந்த வேலையை விட்டாச்சு' என அப்போதே விகடனுக்கும் பேசியிருந்தார்.
இந்த நிலையில்தான் தற்போது எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் எனத் தேடினோம்.
நாம் தேடிய நேரமோ என்னவோ, மீண்டும் சீரியல் பக்கம் வரவிருக்கிறாராம். பிரபல சேனலில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றிற்காக சில தினங்களுக்கு முன்புதான் இவரிடம் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்களாம்.
ஒருவழியாக இர்ஃபனை லைனில் பிடித்துப் பேசினோம்.
''குடும்ப பிஸினசை பார்க்க சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கே போயிட்டேன்னு வெளியான தகவல்களில் கொஞ்சம்கூட உண்மையில்லை. சென்னையில் தான் நான் இருக்கேன். சினிமாவை எப்படி சார் விட்டுட்டு போவேன்? வெற்றியோ தோல்வியோ கடைசி வரை முயற்சியை கைவிடக் கூடாதுங்கிற முடிவுல இருக்கேன்.
'கனா', 'சரவணன் மீனாட்சி' முதலான சீரியல்கள் எனக்கு பெரிய ரீச்சைத் தந்ததுதான். அதைத் தொடர்ந்து பல சீரியல் வாய்ப்புகள் வந்துட்டே தான் இருந்தது. 'குக்கு வித் கோமாளி' ஷோவுக்கு கூப்பிட்டாங்க. ஆனா நானேதான் டிவி வாய்ப்புகளை மறுத்துவிட்டு சினிமா தேடலில் இருந்தேன்.
சீரியல்ல இருந்தா சினிமா பண்ண முடியாமப் போயிடுமோன்னு தோணவே, இந்தவொரு முடிவை எடுத்தேன்.

ஒரு முடிவை எடுக்கறோம், அது சரியா ஒர்க் அவுட் ஆகலைன்னா மாத்திக்கிடறதுதானே நல்லது. அதான் இப்ப சீரியலையும் பண்ணலாம்னு நினைக்கிறேன். அதுக்காக இனி சினிமா பத்தி யோசிச்சு பார்க்கப் போவதில்லைன்னு அர்த்தமில்லை. சினிமா வரும் போது பண்ணலாம்.
காலம் தாழ்த்தி எடுத்த முடிவுதான்னாலும், கடந்து போனதை நினைத்து என்ன பலன்' என்கிறார்.
இதுவரை அப்பாவியாக அல்லது சாக்லேட் பாய் லுக்கில் வந்தவரை வரும் சீரியலில் கொஞ்சம் 'ரக்கட் பாய்' போல் காட்ட இருக்கிறார்களாம்.
அடுத்த சில தினங்களில் தொடர் குறித்த அறிவிப்பு வரலாம் எனத் தெரிகிறது.