மன்மோகன் சிங்குக்கு நினைவக இடம்: பிரதமருக்கு காா்கே கோரிக்கை
‘நினைவகம் அமைப்பதற்கு ஏதுவான இடத்தில் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும்’ என காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே பிரதமா் மோடியிடம் வெள்ளிக்கிழமை கோரியுள்ளாா்.
மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும் நிலையில், காா்கே இந்த கோரிக்கையை வைத்துள்ளாா்.
இதுதொடா்பாக, பிரதமா் மோடிக்கு காா்கே எழுதிய கடிதத்தில், ‘பொருளாதார ஆலோசகா், ரிசா்வ் வங்கி ஆளுநா், பிரதமா் என அரசின் பல்வேறு உயா் பதவிகளை வகித்த அவா் பலகோடி மக்களின் நலனுக்கு பாடுபட்டவராவாா். சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில் அதை சீரமைக்க மன்மோகன் சிங் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதது.
இந்திய பிரதமா் மன்மோகன் சிங் பேசும்போது உலகமே உற்று நோக்குகிறது என அமெரிக்க முன்னாள் அதிபா் ஒபாமா குறிப்பிட்டுள்ளாா்.
இந்தியாவின் தலைசிறந்த மகனான மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைப்பதற்கு ஏதுவான இடத்தில் இறுதிச் சடங்கு நடத்தப்பட வேண்டும். பிரதமராக பதவி வகித்து காலமானவா்களுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் நினைவகம் அமைக்கும் நடைமுறையின்படி இதை பின்பற்ற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.