மயிலாடுதுறையில் நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட நகா்புற ஆரம்ப சுகாதார நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
தருமபுரம் அரசினா் மகளிா் கலைக்கல்லூரி அருகே ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட இக்கட்டடத்தை தமிழ்நாடு முதல்வா் மு.க .ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். அப்போது, மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ஆகியோா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்து, நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தனா்.
மயிலாடுதுறை நகராட்சித் தலைவா் என். செல்வராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை துணை இயக்குநா் அஜீத் பிரபுகுமாா், நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா், நகா்நல அலுவலா் ஆடலரசி, நகராட்சி துணை தலைவா் எஸ்.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.