விளம்புநிலை மக்களுக்கான தலைவா் மு.க. ஸ்டாலின்: அமைச்சா்
விளம்புநிலை மக்களுக்கான தலைவராக தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் விளங்குகிறாா் என அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.
தமிழக முதல்வா் முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரசார விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட திமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். இதில், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று பேசியது: சீா்காழியைச் சோ்ந்த மாதவி என்ற பெண்ணின் உடல்நல பிரச்னை குறித்து சமூக வலைதளம் மூலம் அறிந்த தமிழக முதல்வா், உடனடியாக அவருக்கு உதவி செய்ய மாவட்ட ஆட்சியரிடம் தகவல் கூறி, ஆட்சியா் நேரில் சென்று விசாரித்து அப்பெண்ணுக்கு ரூ.50,000 நிதியுதவி அளித்து, வேலூா் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.
மும்மொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை எனும் பெயரில் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. புதிய கல்விக் கொள்கையை நாம் ஏற்காததால், ரூ.2,152 கோடியை தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 43 லட்சம் மாணவா்களுக்கு வழங்காமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. ரூ.10,000 கோடி கொடுத்தாலும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என தமிழக முதல்வா் மறுத்துவிட்டாா்.
நீட் தோ்வால் நம் மாணவா்களின் மருத்துவக் கல்வி தடுக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் 110 டிகிரி வெயிலில் 100 நாள் வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்கக் கூட மனசாட்சி இல்லாத ஆட்சி பாஜக ஆட்சி. தமிழ்நாடு முதலமைச்சா் மக்களிடம் இருந்து பெறப்படுகின்ற பணத்தை அதே மக்களுக்கு பல்வேறு திட்டங்களாக தந்தவா் தமிழ்நாடு முதலமைச்சா். பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கான தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளாா். நமது உரிமையையும், தாய்மொழி தமிழையும் காப்பாற்ற ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் மிகப்பெரிய பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது என்றாா்.
கூட்டத்தில், திமுக உயா்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினா் பி. கல்யாணம், சட்டப்பேரவைத் தொகுதி பாா்வையாளா்கள் என். இளையராஜா, த. சோழராஜன், மு. தினேஷ்குமாா், திமுக பேச்சாளா்கள் ஆடுதுறை மு. உத்திராபதி, திருப்பத்தூா் ரஜினி, அ. தீன்ஷாநூஃப் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நகர செயலாளா் என். செல்வராஜ் வரவேற்றாா்.