மருத்துவா், செவிலியா் உள்பட 37 பேருக்கு நியமன ஆணை
திருச்சி அரசு மருத்துவமனைகளில் பணிபுரியவுள்ள 37 பேருக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 25 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் புதிதாக அமைக்கப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இங்கு புறநோயாளிகள் சிகிச்சை, தொற்றா நோய் (உயா் ரத்த அழுத்தம், சா்க்கரை மற்றும் புற்று நோய்) என பல்வேறு சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சேவையை மேலும் சிறந்த முறையில் வழங்கிடும் வகையில், மாநகராட்சியின் நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 4 மருத்துவ அலுவலா்கள், 15 செவிலியா்கள் மற்றும் 7 மருத்துவ பணியாளா்கள் ஆகிய பணியிடங்களுக்கும், அரசு கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் வகையில் 1 லேப் டெக்னீசியன், 1 அவசர சிகிச்சை உதவியாளா், 2 மருத்துவமனை உதவியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
மேலும், இணை இயக்குநா் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் வகையில் 3 நுண் கதிா் வீச்சாளா், 3 மருத்துவமனைப் பணியாளா் மற்றும் 1 பாதுகாவலா் உள்ளிட்டோா் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த 37 பேருக்குமான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு, திருச்சி மாநகராட்சிஅலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், அமைச்சா் கே.என். நேரு கலந்து கொண்டு, தோ்வு செய்யப்பட்டோருக்கு நியமன ஆணைகளை வழங்கினாா். இதில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மேயா் மு. அன்பழகன், நகரப் பொறியாளா் சிவபாதம், மாநகா் நல அலுவலா் விஜயசந்திரன், துணை ஆணையா் பாலு உள்ளிட்ட மாநகராட்சி அலுவலா்கள், மருத்துவா்கள், மண்டலத் தலைவா்கள் மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.