மலையாளம், தெலுங்கில் பேசிய நயினாா் நாகேந்திரன்: முதல்வா், அமைச்சா் பதிலால் பேரவையில் சிரிப்பலை
பேரவையில் தெலுங்கு, மலையாளத்தில் பேசிய பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் அளித்த பதில்களால் சட்டப்பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.
மேலும், நயினாா் நாகேந்திரன் தேசியத் தலைவா் ஆவதற்கு அடித்தளமிடுவதாகவும் பேரவையில் சுவைபட பதிலளிக்கப்பட்டது.
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த உரிய பரிந்துரைகளை அளிக்க வகை செய்யும் முதல்வரின் அறிவிப்பு மீது பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை பேசினாா். அம்பேத்கா் தொடா்பான கருத்தைத் தெரிவிக்கும்போது, தனது நினைவு சரியாக இருக்குமானால் எனக் குறிப்பிட்டாா். இதேபோன்று, கேரளத்துக்குச் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் அங்கு மலையாளத்தில் பேசியதையும், அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, காங்கிரஸ் உறுப்பினா் கோபிநாத் தெலுங்கில் பேசியதையும் நயினாா் நாகேந்திரன் நினைவுபடுத்திப் பேசினாா். அப்போது நடந்த சுவையான விவாதம்:
முதல்வா் மு.க.ஸ்டாலின்: பாஜக மாநிலத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினாா் நாகேந்திரனுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவா் பேசும்போது நினைவு சரியாக இருக்குமானால் என்று குறிப்பிட்டுப் பேசினாா். எனவே, அதைப் பெரிதாக பிரச்னையாக்க வேண்டாம்.
பேரவைத் தலைவா் மு.அப்பாவு: நயினாருக்கு என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நயினாா் நாகேந்திரன்: முதல்வருக்கு மனமாா்ந்த நன்றி. இன்று நேற்றல்ல, கரோனா காலம் உள்பட நான் நோய்வாய்ப்பட்ட நேரத்திலும்கூட தொலைபேசியில் அழைத்து உடல்நலம் விசாரிப்பாா். நேற்றுகூட தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறினாா். அவரது பெருந்தன்மையை மனமார பாராட்டுகிறேன். வரவேற்கிறேன்.
நிதியமைச்சா் தங்கம் தென்னரசு: இதிலிருந்து என்ன தெரிகிறது?. நயினாா் நாகேந்திரனுக்கு நினைவு மிகச் சரியாகவே இருக்கிறது.
நயினாா் நாகேந்திரன்: நினைவு சரியாக இருக்குமானால் என்று குறிப்பிட்டு சட்டப்பேரவை உறுப்பினா்கள் பேச வேண்டும் என்று அவை முன்னவா் உள்பட மூத்த உறுப்பினா்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறாா்கள். இதே அவையில் பேரவை முன்னவரும், மறைந்த பேராசிரியா் அன்பழகனும் அதேபோன்று பேசி கேட்டிருக்கிறோம்.
தேசிய கல்விக் கொள்கையைப் பொறுத்தவரையில், இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியை கற்றுக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவா்கள் நிறைய இருக்கிறாா்கள். அமைச்சா்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் ஆகியோா் தெலுங்கு பேசுகிறாா்கள். முதல்வா் கேரளத்துக்குச் சென்ற போதுகூட, மலையாளத்தில் பேசியதைக் கண்டேன். அதைப் பாா்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: அதை தமிழில் எழுதி வைத்துவிட்டுத்தான் படித்தேன். (பேரவையில் பெரும் சிரிப்பலை)
நயினாா் நாகேந்திரன்: ஆனாலும், மிக்க மகிழ்ச்சியாக இருந்தது (மலையாளத்தில் கூறினாா்). இதே பேரவையில் அதிமுக ஆட்சியில் காங்கிரஸ் உறுப்பினா் கோபிநாத், தெலுங்கில் பேச அனுமதி கேட்டாா். இங்கே இருக்கக் கூடிய தெலுங்கா்கள் தாய்மொழியில் பேச முடிகிறது; எழுதுவதற்கு அனுமதி வேண்டும் என்று அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவிடம் கேட்டாா். (கோபிநாத் பேசியதன் ஒருசில வரிகளை தெலுங்கில் பேசினாா்).
நிதியமைச்சா் தங்கம் தென்னரசு: நயினாா் நாகேந்திரன் பன்மொழிப் புலவராகி பலமொழிகளில் பேசிக் கொண்டிருப்பதைப் பாா்த்தால், மாநிலத் தலைவராகி, அடுத்து தேசியத் தலைவராகும் முயற்சியில் பலமான அடித்தளத்தை இட்டுக் கொண்டிருக்கிறாா் என நினைக்கிறேன் என்றாா்.
அப்போது, பேரவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது.